April 22, 2024

சமஷ்டி குறித்து கலந்துரையாட ஒன்றுகூடும் தமிழ்க்கட்சிகள்

வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்க் கட்சிகள் வியாழக்கிழமை (நவ. 24) சமஷ்டி பற்றிக் கலந்துரையாடுவதற்காக கூடவுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இந்தச் சந்திப்பு மாலை 5.30இற்கு ஆரம்பமாகவுள்ளது. 

இந்தச் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான இலங்கை தமிழரசுக்கட்சி, ரெலோ, புளொட் ஆகியனவும், சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும், விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் பங்கேற்கவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும், உடல்நலக்குறைவு காரணமாக அக்கட்சியின் தலைவர் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

அதேநேரம், குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர். 

எனினும், இக்கூட்டத்தின் ஏற்பாட்டாளரான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சோனாதிராஜா அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறிருக்கையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும், மாவை சோ.சேனாதிராஜாவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடலொன்று நடைபெற்றுள்ளது. 

இந்த உரையாடலின்போது, கஜேந்திரகுமாரை நீண்டகாலமாக சந்தித்து உரையாடல் மேற்கொள்ளவில்லை என்றும் அந்த இடைவெளியை போக்கும் முகமாக விரைவில் சந்திக்க விரும்புவதாகவும் மாவை.சோ.சேனாதிராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, அதற்கு பச்சைக்கொடி காண்பித்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எதிர்வரும் 27ஆம் திகதி அல்லது 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து மாவை.சோ.சேனாதிராஜாவைச் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன், குறித்த  கூட்டத்தில் கஜேந்திரகுமாரையும் பங்கேற்கச் செய்தவதற்கான பிரயத்தனத்தைச் செய்வதாக மாவை.சேனாதிராஜா தெரிவித்திருந்தபோதும், அவருடனான உரையாடலின்போது இன்றைய கூட்டத்தில் பங்கேற்குமாறு எவ்விதமான கோரிக்கைகளையும் விடுக்கவில்லை.

மேலும், சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறும் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற முடிவினை தமது மத்தியகுழு எடுத்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert