April 18, 2024

சுமா நேரில்: பங்காளிகள் காணொலியில்!

அடுத்த ஜநா அமர்வில் இலங்கையினை காப்பாற்ற ஜெர்மனிற்கு நேரில் சென்று இரகசியமாக அலுவல் பார்த்து எம்.ஏ.சுமந்திரன் திரும்பியிருக்க மறுபுறம் ஊரில் இருந்தவாறே ஜெர்மனிய வெளிவிவகார அமைச்சு பிரதானிகளுடன் ஆறு தமிழ் கட்சி தலைவர்கள் இணையவழிச் சந்திப்பினை நடத்தியுள்ளனர்.

ஜெர்மனியின் வெளிவிவகார அமைச்சின் ஆசிய பிராந்தியத்திற்கான தலைவர் திருமதி சபின் சிட்லர் மற்றும் இலங்கைக்கான விசேட அதிகாரி திரு. மரியோ கியோரி ஆகியோருடன்; மாவை சேனாதிராஜா, நீதியரசர் விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் ஏற்பாட்டாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  சிவஞானம் சிறீதரன், கோவிந்தன் கருணாகரம், சிறிகாந்தா ஆகியோர் பிரத்தியேக காரணங்களால் பங்குபெற்ற முடியவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீண்டகால இடைவெளிக்குப் பின்னராக, ஐநா மனித உரிமைப் பேரவையில் முக்கிய நாடாகவும்,  ஐநா பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடாகவும் இருக்கும்  ஜெர்மனியுடன் நடாத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தை அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் மிகவும் முக்கியம் வாய்ந்தது. 

தமிழ் மக்கள் சார்ந்த பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலையை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.  ஐநா மனித உரிமைப் பேரவையில் பிரதான நாடாக அங்கம் வகிக்கும் ஜெர்மனி, தமிழ் மக்கள் சார்ந்து ஆதரவு நிலைப்பாட்டில் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதற்காக நன்றி தெரிவிக்கப்பட்டது.  மனித உரிமை உயர்ஸ்தானிகரின் 46-1 அறிக்கையில் பரிந்துரைக்கப் பட்ட பிரகாரம் இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கான கோரிக்கையை ஐநா பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தமிழ் கட்சித் தலைவர்களால் பிரதானமாக முன்வைக்கப்பட்டது

 ஐநாவில் பல்வேறு பிரேரணைகள் நிறைவேற்றப் பட்ட போதிலும்,  அவை இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் விடயங்கள் இன்று வரை நடைமுறைப் படுத்தப் படாமல் இருப்பதை அவதானிக்க முடிகிறது என்று தமிழ் கட்சித்தலைவர்களால் சுட்டிக் காட்டப்பட்டது.  

அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், காணி அபகரிப்பு, இன குடிப்பரம்பல் சிதைப்பு,  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் நடைபெறுகின்றமை, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் நிலை என்ற பல அவசரமான பிரச்சினைகள் பற்றி பேசப்பட்டது.  

நிரந்தர அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகள்  சர்வதேச சமூகம் உட்பட தமிழர் தரப்பு வலியுறுத்தி வந்தாலும் இலங்கை அரசாங்கங்கள் அதை நிறைவேற்றும் நோக்கங்களில் அர்ப்பணிப்பு அற்ற நிலையே தொடர்ச்சியாகக் காணப்படுகிறது.

தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சூழ்நிலையில் இருந்து நாடு மீள வேண்டிய தேவை உள்ளது.  அதற்கான ஆதரவை தமிழ்த் தரப்புகள் நிபந்தனையின் அடிப்படையில் வழங்குவதற்கு தயாராக உள்ள போதிலும் அரசு தங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்றுமா என்ற சந்தேகம் காணப்படுவதாகவும்,  அதேநேரம் சர்வதேச சமூகம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் வேளையில் தமிழர்களுடைய அரசியல் தீர்வு பற்றிய கரிசனை கொள்வது நன்மை பயக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. 

அதற்கு பதில் வழங்கிய திருமதி சபின் சிட்லர் அவர்கள்,  நீதிப் பொறிமுறையை நடைமுறைப் படுத்துவதற்கான ஏற்பாடுகளில் பிரதான நாடுகளுடன் தாங்கள் தொடர்ந்து முயற்சிப்பதாகத் தெரிவித்தார். 

ஐநா பொறிமுறைக்கு வெளியிலும் குறிப்பாக ஜி.எஸ்.பி வரிச்சலுகை, இலங்கைக்கான நிதி வழங்கல் என்பவற்றினூடாக தாங்கள் இலங்கையை பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்

 எதிர்வரும் செப்டம்பர் மாத ஜெனீவா மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில்  தமிழ் மக்களின் சார்பாக கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் தெரிவித்த பல்வேறு கருத்துக்களை ஜெர்மனிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு அவற்றை ஐநாவில் பிரதிபலிக்கும் வகையில் பிரதான மற்றும் அங்கத்துவ நாடுகளுக்கு தாங்கள் முன்னெடுத்துச் செல்வதாகவும் உறுதி அளித்தார் என டெலோ பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert