April 20, 2024

சில்லறைத்தனமான கைதுகளை நிறுத்துக:உமா

பொதுஜன பெரமுனவின் நிழலாக இருக்கக்கூடிய ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இவ்வாறான சில்லறைத்தனமான கைதுகளை நிறுத்திவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கக்கூடிய நீண்ட கால தொலைதூர சிந்தனைகளை நாட்டு மக்கள் சார்ந்த எடுக்க வேண்டும்  என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரபிரகாஷ் தெரிவித்தார்.

 இலங்கையில் ஜனநாயக போராட்டத்தில் எழுப்பபடும் குரல்வளையை நசுக்க முற்படுகின்றார்கள். எனவே இந்த போராட்டத்தை அடக்குவதால் மக்கள் எழுச்சி போராட்டங்கள் முடிவுக்கு வந்துவிடும் என்று அரசு பகல் கனவு காண்கிறது. அடக்க அடக்க மக்கள் போராட்டம் வெடிக்கும்  இலங்கையில் அவ்வாறான நிலைமையை கடந்த காலங்களில் நாங்கள் பார்த்திருக்கின்றோம். மக்கள் எழுச்சி போராட்டம் என்பது சாதாரண விடயமாக பார்க்கக் கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரபிரகாஷ் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே உமாச்சந்திரபிரகாஷ் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 75 வீத மின்கட்டண அதிகரிப்பு என்பது சாமானிய மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே போல மண்ணெண்ணையின் விலை அதிகரிப்பும் பொதுமக்களை பாதிக்கும். வருமானம் குறைந்த மத்தியதர வகுப்பில் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துபவர்களுக்கு இவ்வாறான பொருட்களின் விலை அதிகரிப்புகள்  பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏற்கனவே பொதுமக்கள் வறுமைக் கோட்டுக்குள் இருக்கின்ற நிலையில் இவ்வாறான விலை அதிகரிப்புகள் மக்களை அதள பாதாளத்துக்கு கொண்டு செல்லும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது ஒழிக்க வேண்டும் என்ற குரல் அண்மைக்காலமாக ஒலிக்கின்றது. ஜெனிவா கூட்டத்தொடரை இலக்கு வைத்து இவ்வாறான விடயங்களை அரசு பேசுவது வழமையானது. அரசியல் கைதிகளுடைய விடுதலை, காணி விடுவிப்பு, தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுதல் போன்ற பல விடயங்களை ஜெனிவா கூட்டத்துடன் இலக்கு வைத்து அரசு பேசுகின்றது.

ஆனால் உண்மையிலேயே தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் பிரதிநிதியாக இவ்விடயங்களை வரவேற்கின்றேன். இவ்வாறான பிரச்சினைகளுக்கு இந்த அரசு, நாட்டின் தலைவர் ரணில் அவசியம் காலத்துக்கு காலம் ஜெனிவா கூட்டத்தொடரை பயன்படுத்துகின்றாரா என்ற கேள்வியை நான் குற்றச்சாட்டாக எழுப்புகின்றேன். ஜெனிவாக் கூட்டத் தொடர் காலத்தில் இவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுக்கும் நேரத்தில் தான் வட்டுவாகல் பகுதியில் காணி அபகரிப்பு தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. எனவே ராஜபக்சவின் நிகழ்ச்சியில் இந்த திட்டம் மறைமுகமாக நிகழ்த்தப்படுகிறதா என்ற கேள்வி எழுகின்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி தேசிய பாதுகாப்பு சட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் அரசு ஈடுபடுகின்றது. தேசிய பாதிப்பு

சட்டத்தை கொண்டு வருவது என்பது ஜனநாயகத்தை பாதுகாக்க குரல் கொடுக்கின்ற குரல்களை நசுக்குகின்ற அடக்குகின்ற ஒரு விடயமாக நாங்கள் பார்க்கின்றோம்.

பொருளாதார ரீதியான வீழ்ச்சி, 

விலை அதிகரிப்பு போன்றவற்றின் காரணமாகவே நாட்டில் ஆட்சி மாற்றம் உருவானது. ஆனால் தற்போதைய அரசு சொல்லுகின்ற விடயம் பல பொருட்கள் எரிபொருள் மற்றும் மின்சாரம் போன்றவற்றை விலை அதிகரித்து விட்டு மக்களை ஏமாற்றுவதற்காக 10 ரூபாய் 20 ரூபாய் குறைப்பது போன்ற நாடகங்களை அரங்கேற்றப்படுகின்றது.

மக்கள் எழுச்சி போராட்டத்தை நசுக்கும் வகையில் மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகள் மூலமாக இலங்கையில் ஜனநாயக போராட்டத்தில் எழுப்பபடும் குரல்வளையை நசுக்க முற்படுகின்றார்கள். எனவே இந்த போராட்டத்தை அடக்குவதால் மக்கள் எழுச்சி போராட்டங்கள் முடிவுக்கு வந்துவிடும் என்று அரசு பகல் கனவு காண்கிறது. அடக்க அடக்க மக்கள் போராட்டம் வெடிக்கும்  இலங்கையில் அவ்வாறான நிலைமையை கடந்த காலங்களில் நாங்கள் பார்த்திருக்கின்றோம். மக்கள் எழுச்சி போராட்டம் என்பது சாதாரண விடயமாக பார்க்கக் கூடாது.

மத்திய வங்கி  கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று சொல்லியே பொதுஜன பெரமுன ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் மத்திய வங்கிப் பிணைமுறி மோசடியை விட பல மடங்கும் திருட்டில் ஈடுபட்டு பொதுஜன பெரமன அரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பொதுஜன பெரமுனவின் நிழலாக இருக்கக்கூடிய ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இவ்வாறான சில்லறைத்தனமான கைதுகளை நிறுத்திவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கக்கூடிய நீண்ட கால தொலைதூர சிந்தனைகளை நாட்டு மக்கள் சார்ந்த எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐக்கிய மக்கள் சக்தியாகவும் பிரதான எதிர்க் கட்சியாகவும் நாம் இதனை வலியுறுத்துவோம் என்றார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert