April 18, 2024

அரசியல் கைதிகள் விடுதலை:ஏமாற்றும் சதி!

அரசியல் கைதிகள் விடுதலை என்ற பேரில் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் சதி முன்னெடுக்கப்படுவதாக அரசியல் கைதிகளது குடும்பங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

யாழ்.ஊடக அமையத்தில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளது குடும்ப உறுப்பினர்கள் பங்கெடுத்த ஊடக சநதிப்பு இன்று வியாழக்கிழமை நடைபெற்றிருந்தது.

கூட்டமைப்பின் பேச்சாளர் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்காவிட்டாலும் அவர்களில் ஒரு தொகுதியினரை முதல்கட்டமாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

தற்போது உள்ள அரசியல் கைதிகளைப் பொறுத்தவரை 47 பேர் வரை சிறைச்சாலைகளில் உள்ளனர். அவர்களில் அதிகமாக 27 வருடங்கள் தொடங்கி 13 வருடங்களுக்கு இடைப்பட்டவர்களாக இருந்து வருகின்றனர்.

தற்போது அரசாங்கம் வழமைபோன்று தனது ஏமாற்று வேலையை ஆரம்பித்துள்ளது.

கடந்த வருடம் ஐ.நா கூட்டத்தொடருக்கு முன்பாக சுமார் 25 பேர் வரையான அரசியல் கைதிகள் அவசர அவசரமாக பிணை வழங்கி விடுவிக்கப் பட்டிருந்தனர்.  அதே பிணை வழங்கிய கைதிகளையே இந்த வருடம் ஐ.நா கூட்டத்தொடருக்கு முன்பாக விடுதலை செய்வதற்கான முயற்சியில் அரசாங்கம் முனைப்புக் காட்டி  வருகின்றது.  

தற்போது அரசாங்கம் விடுவிப்பதற்காக முயற்சித்து வரும் கைதிகள் யாருமே விடுவிக்கப்பட கூடாதவர்கள் என்பதல்ல. அவர்களும் விடுதலை செய்யப் பட வேண்டியவர்களே அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தற்போது விடுவிக்கப்பட உள்ளவர்கள் யாருமே கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர்களே அல்லர். எல்லோருமே இருபது இருபத்தி இரண்டு பராயத்தை உடையவர்கள்.இறுதி யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் ஆறு ஏழு வயது சிறுவர்களாக இருந்தவர்கள்;

யுத்தம் முடிந்த பின்னர் ‘மாவீரர் நாளுக்கு விளக்கேற்றினார்கள், தலைவரின் புகைப்படத்தை முகப்புத்தகத்தில் பகிந்தார்கள்’ போன்ற காரணங்களுக்காக் புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்தார்கள்  என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.  

தற்போது பிணையில் உள்ள இவர்களையே ஐ.நா கூட்டத்தொடருக்கு முன்பாக விடுவித்துவிட்டு ஐ. நா வையும், தமிழ்மக்களையும் அரசாங்கம் ஏமாற்ற விழைகின்றது. இதற்கு கூட்டமைப்பும் ஒத்து ஓதுகின்றது என்பதுதான் வேதனையென குடும்பங்கள் தெரிவித்துள்ளன

அரசியல் கைதிகளான பிள்ளைகளது விடுதலைக்காக குரல் கொடுத்த தாய்,தந்தையர் இறந்துள்ள நிலையில் இனியேனும் குடும்பங்களை வந்தடைய அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert