April 20, 2024

9 மில்லியன் ரூபா தங்கத்துடன் மூவர் கைது!

மன்னார் பேசாலை  கடற்பரப்பில் நேற்று (25) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நாட்டிலிருந்து கடத்த முயன்ற சுமார் 470 கிராம் தங்கம் மற்றும் சங்கு (வலம்புரி) ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேசாலை – தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை  இரவு  கடற்படையினர் விசேட ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது பேசாலை  கடற்கரையில் இருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த  படகு ஒன்றை கடற்படையினர் பரிசோதித்தனர்.

குறித்த படகில் இருந்து 470 கிராம் தங்கம் மற்றும் வலம்புரிச் சங்கு ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்துடன்  ஈடுபட்ட 3 சந்தேக நபர்களையும் அந்த பொருட்களை கடத்த பயன்படுத்திய டிங்கி படகையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில் இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ. 9 மில்லியன் என கடற்படையினர் தெரிவித்தனர்

கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 முதல் 39 வயதுக்குட்பட்ட புத்தளம் மற்றும் பேசாலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேக நபர்கள், தங்கம், சங்கு மற்றும்  படகுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள சுங்க அலுவலகத்தில் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert