März 28, 2024

50வது கூட்டத்தொடரில் பலம் சேர்ப்போம்: ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் கவனயீர்பு!

கடந்த 49 வது  மனித உரிமைகள் கூட்டத் தொடரில், ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சர்வதேச சட்ட மீறல்களை சிறீ லங்கா அரசு மேற்கொண்டதாகவும் எந்த நிலமையிலும் அவர்கள் நீதிக்கான பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துக்கொள்ள இயலாது எனவும் சுட்டிக்காட்டி தன் கடந்த காலத்து தீர்மானத்தினையே மீளவும் ஆணித்தரமாக வலியுறுத்தி இருந்தார் என்பது யாவரும் அறிந்ததே.

அனைத்துலக குமூகம் தமிழினப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர முன்வரும்  நிலையில், பூகோள அரசியல் நலன் கருதி அமெரிக்கா, பிரான்சு, பிரித்தானியா,, ஜெர்மனி, இந்தியா போன்ற நாடுகள் சீறிலங்கா அரசாங்கத்துடன் பேரம்பேசியும் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தியும் தமிழினப்படுகொலைக்கான நீதியைத் தாமதப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட நாடுகள் தமிழினப் படுகொலைக்கான நீதிவிசாரணையினை தாமதப்படுத்துவதற்காக, தமிழ்ப்பிரதிநிதிகளென தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இச் சூழ்நிலையைப் பயன்படுத்தி. சிறீ லங்காப் பேரினவாத அரசானது, 50 ஆவது கூட்டத் தொடரிலும் நீதி விசாரணையினை நீர்த்துப்போகச் செய்து, வழமை போல் கால அவகாசத்தினை பெற்றுக்கொள்ளும் விதமாக பல கபட நாடகங்களை ஆடி வருகின்றது.

ஆனாலும் தமிழ் மக்களுடைய இடைவிடாத தொடர் போராட்டங்கள், ஐ.நா சபையினுள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தொடர்ந்தும் பேசு பொருளாக வைத்திருக்கின்றன.

இந்நிலையில் நாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளை எமக்கான நீதிக்காக  ஊக்குவிக்கும் வகையில் விரைவுபடுத்த வேண்டியவர்களாக உள்ளோம்.  

எம்மிடத்தில் இருக்கும் இன்னும் சில சொற்பமான கால அவகசாத்தினைச் சரிவர பயன்படுத்தும் நோக்கில், நடந்து கொண்டிருக்கும் 50 ஆவது கூட்டத் தொடரை (13/06/2022-08/07/2022) இலக்காக வைத்து, நாம் வாழும் நாடுகளில் உள்ள வெளி நாட்டு அமைச்சுகள், அரசியல் மையங்கள், தூதரகங்களின்  முன்றல் ஆகிய இடங்களில்  அறவழிப் போராட்டங்கள், கவனயீர்பு நிகழ்வுகள், எழுச்சி பேரணிகள்,கண்காட்சிகள், உணவுத்தவிர்ப்புப் போராட்டங்கள், கருத்தரங்குகள், ஈருருளிப்பயணங்கள் அல்லது நடைபயணம்… என பரந்துபட்ட தொடர் போராட்டங்களை நடாத்தி,  நாம் மேலும் எமது வேணவாக்களினை ஐயம் திரிபின்றி இடித்துரைக்க வேண்டும்

2009 ம் ஆண்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை காலதாமதமின்றி சமர்ப்பித்து அனைத்துலக நீதிவிசாரணை ஊக்குவிக்குமாறும் வலியுறுத்த வேண்டும்.

2011 ஐக்கிய நாடுகள் அவையின் நிபுணர்குழு விசாரணை மற்றும் 2014ம் ஆண்டு மனித உரிமைகள் ஆணையகத்தின் புலன்விசாரணை போன்றவற்றில் தமிழ் மக்களின் சாட்சிகளே தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசினால் நடத்தப்பட்டது போர்க்குற்றம், மனித நேயத்திற்கு எதிரான குற்றம், தமிழினப் படுகொலை , சர்வதேச சட்டவிதி மீறல் போன்றவற்றை உறுதிசெய்தன. ஆனாலும் ஐக்கிய நாடுகள் அவையானது தமிழினப் படுகொலை தொடர்பான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொருட்டும் மேலும் சாட்சிகளை வேண்டியுள்ளார்கள்.  அந்த வகையில் 74 ஆண்டுகாலமாக தமிழினப்படுகொலை நடாத்திய சிறீலங்கா அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கூடிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கு ஆயத்தம் செய்யும் வகையில், தமிழினப் படுகொலைச் சாட்சியங்களைச் சேகரித்து ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையகத்திற்கு  மேலும் கொடுத்துக் கொண்டு இருக்கின்றோம்

உலக நாடுகள், ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆலோசனை அவையில் உறுப்புரிமை வகிக்கின்ற நாடுகள், அவர்களது பூகோள நலனில் மாத்திரம் தங்கியிராது, தமிழ்மக்களுக்கான நீதியை வழங்க வலியுறுத்தும் வகையில்  வாழிட நாடுகளில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.

சிங்களப் பேரினவாத அரசுகளினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திற்கு சாட்சி வழங்குவதன் மூலம்  சிறீலங்கா சிங்கள சர்வாதிக அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி தமிழினப் படுகொலைக்கான நீதியினை பெற்றுக்கொள்ள முடியும்.

அதற்கேற்ப, அறவழிப்போராட்டங்களில் நீதிக்காக குரல் கொடுக்கக்கூடிய நகர பிதா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், மனித உரிமை ஆர்வல்கள், சான்றோர்கள்… போன்றோரை அழைத்து போராட்டங்களை செய்வதுடன் அவர்களையும் அந்நாட்டு அரசுகளிடத்தில் அழுத்தம் கொடுக்கச் செய்து வருகின்றோம்.

இவ்வறவழிப்போராட்டங்களை  பரவலாக அனைத்து வாழிட நாடுகளிலும் தொய்வின்றி நடத்தி,  மனித உரிமைகள் ஆலோசனை அவையின் 50வது கூட்டத்தொடருக்கு பலம் சேர்க்கும்  பொருட்டு திங்கட் கிழமை 20/06/2022 அன்று ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்  பிற்பகல் இரண்டு மணி தொடக்கம் ஐந்து மணிவரை நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு கூடுதலான மக்களைக் கலந்து கொள்ள எல்லோரும் ஒத்துழைப்போம்.

நன்றி,

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஐரோப்பியத் தமிழர்  ஒன்றியம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert