April 25, 2024

தப்பிக்க கடவுச்சீட்டை கையளிக்க மறுக்கும் மகிந்த,நாமல்!

முன்னாள் பிரதமர் மகிந்த அவரது மகன் நாமல் உள்ளிட்டவர்கள் நாட்டைவிட்டு தப்பிக்காதிருக்க தமது கடவுச்சீட்டை ஒப்படைக்க நீதிமன்று பணித்துள்ள போதும் அதனை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

நீதிமன்ற உத்தரவை மீறி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட பலர், இதுவரை தமது கடவுச்சீட்டுக்களை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளனர் என, சட்டமா அதிபர்,  நீதிமன்றில்  அறிவித்துள்ளார்.

மே 9ஆம் திகதி அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான நீதவான் விசாரணை, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் முன்னெடுக்கப்பட்ட போதே, சீ.ஐ.டி சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன மேற்கண்ட விடயத்தை அறிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட பலர் இதுவரையில் தமது கடவுச்சீட்டுக்களை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளனர் என்று நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எம்.பிக்களான நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட 16 பேருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, மே 12ஆம் திகதி பயணத்தடை விதித்திருந்தார்.

இதேவேளை, சட்டமா அதிபரின் பணிப்புரையை புறக்கணித்து, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை, இடமாற்றம் செய்ய பொலிஸ் திணைக்களம் தவறியமைக்கான காரணத்தை விளக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதவான் திலின கமகே, உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், தேவையற்ற தலையீடுகளைத் தடுப்பதற்காக தேசபந்து தென்னனகோனை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு  திங்கட்கிழமை (23) பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert