துல்லியமாக இலக்கை அழிக்கும் பினாகா ஏவுகணை சோதனை வெற்றி

 

வெவ்வேறு தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் பினாகா ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ரக ஏவுகணைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டி.ஆர்.டி.ஓ.) தொழில்நுட்ப உதவியுடன், தனியார் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.

பினாகா ஏவுகணை அமைப்பின் சோதனை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இவை 40 கிலோ மீட்டர் தூரம் முதல் வெவ்வேறு தூரங்களில் உள்ள இலக்குகளை தாக்கும் சக்தி கொண்டவை. பினாகா ஏவுகனை தொடர்பான மற்ற சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதும், ஹெலிகொப்டரில் இருந்து ஏவக்கூடியதுமான சந்த் ஏவுகணையும் இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இந்த ஏவுகணை தொலைவில் இருந்து, பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையாகவும் செயல்படும். அதிநவீன மில்லி மீட்டர் அலை ரேடார் தேடும் கருவி பொருத்தப்பட்டுள்ள இந்த ஏவுகணை, பாதுகாப்பான தூரத்தில் இருந்து அதிக துல்லியமான தாக்கும் திறனை கொண்டுள்ளது.

10 கிமீ தூரம் வரையிலான இலக்குகளை இந்த ஆயுதம் தாக்கும். இவ்விரு சோதனைகளையும் வெற்றிகரமாக நடத்திய குழுவிற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். சந்த் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை உள்நாட்டுப் பாதுகாப்புத் திறனை மேலும் மேம்படுத்தும் என்று பாதுகாப்புத் துறையின் செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி கூறினார்.