April 20, 2024

புலம்பெயர் பணத்தினை முடக்கும் கோத்தா?

புலம்பெயர்வு உறவுகளது முக்கிய பணப்பரிமாற்றத்தை முடக்க இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது.அதனை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகள் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டுப் பணமென இலங்கை அரசு அடையாளப்படுத்திவருகின்றது.

இந்நிலையில் இலங்கையில் ஒரு மாதத்திற்குள் சுமார் 7200 கோடி ரூபா பணம் புழங்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான நிதி கையாளப்படும் சந்தேகத்திற்கிடமான கணக்குகள் தடை செய்யப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறைகளில் முதன்மையானது வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புதல். இம்முறையில் ஆண்டுக்கு சுமார் 7 பில்லியன் டொலர்கள் பணம் அனுப்பப்படுகிறது. கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைந்துள்ளது. பல்வேறு முறைகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யப்படுவதால், சில இடங்களில் டொலர் சுமார் ரூ.200-க்கு சுமார் ரூ.240-க்கு செலுத்தப்படுவதைக் காண்கிறோம்.

300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றால் இங்கு 72 பில்லியன் ரூபா விநியோகிக்கப்பட வேண்டும். 7200 கோடி ரூபா நாட்டில் விநியோகிக்கப்பட வேண்டும். பணமோசடி சட்டத்தின் கீழ், வெளிப்படையான காரணமின்றி ஒருவர் மற்றொரு நபரின் கணக்கில் பணத்தை மாற்றுகிறாரா என்பதை நாங்கள் கவனிக்கிறோம். அத்தகைய கணக்குகளை மத்திய வங்கி தடை செய்ய முடியுமெனவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.