April 20, 2024

சிவகரனிடம் இரண்டரை மணிநேரம் விசாரணை.

கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வவுனியா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம், மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, இன்று  (7) விசாரணைக்கு உற்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த கால சிவில் சமூக செயற்பாடுகள், நடத்தப்பட்ட நிகழ்வுகள் தொடர்பாகவும்  குறிப்பாக, மாவீரர் தின நிகழ்வுகள் சம்பந்தமாகவும் பல்வேறு கோணத்தில் கேள்விகள் தொடுத்து சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக, அவர் தெரிவித்தார்.

குறித்த விசாரணைகள் ஊடாக, எம்மை சிவில் சமூக செயற்பாடுகளில் இருந்து எமது சன நாயக குரல்வளையை நசுக்கும் விதமாகவே அவர்களின் கேள்விகள் காணப்பட்டதாக, வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

“சிவில் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று சர்வதேச அரங்கில்  ஜனாதிபதி கூறுகிறார். ஆனால்   மறுபுறத்தில் சிவில் அமைப்புக்களை நசுக்க முனைகிறது அரசின் புலனாய்வு  அமைப்புகள். ஆகவே,  இவ்வாறான நெருக்கடிகளைக் கண்டு நாம் அச்சப்பட போவதில்லை. இவ்விதமான விசாரணைகள் எமக்கு புதியவை அல்ல.

” எனவே, எமது சமூக பணி தொடர்ந்தும் தொடரும்  என்பதுடன்  சிவில் சமூக அமைப்புக்களை இலங்கை அரசு தொடர்ந்து   நசுக்க முனைவது வேதனைக்குரிய விடயம் என்று” அவர் மேலும் தெரிவித்தார்.