April 19, 2024

இலங்கை நாடாளுமன்ற நுழைவாயிலில் எதிர்கட்சி போராட்டம்!!

இலங்கை நாடாளுமன்றத்தில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும், ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலரின் அராஜக செயற்பாடுகளை கண்டித்தும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை (06) காலையில் நாடாளுமன்ற வளாகத்திற்கு உள்ளே ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர் மனுஷ நாணயக்காரவுக்கு உரையாற்றுவதற்காக மேலதிக நேரத்தை வழங்காமை தொடர்பில் சபையில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

கடந்த சனிக்கிழமையும் சபைக்குள் அமைதியின்மை ஏற்பட்டநிலையில், ஆளும் கட்சி உறுப்பினர்கள் தங்களை தாக்குவதற்கு முயற்சித்ததாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

சனிக்கிழமை பாராளுமன்ற அமர்வுகளின் போதும் ஆளும் எதிர் கட்சிகளுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்  இருந்து வெளிநடப்பு செய்திருந்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இந்நிலையில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரையில் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாதிருக்க தீர்மானித்த அவர்கள், இன்றைய தினம் பாராளுமன்றம் கூடியபோது பாராளுமன்றத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல,பாராளுமன்ற உறுப்பினர்களான  சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரட்ன, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், சரத்பொன்சேகா, வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இவர்கள் அரசாங்கத்தின் உறுப்பினர்களுக்கு எதிராக எழுதப்பட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியாவாறு இந்த அர்ப்பாட்டத்தை நடத்தினர்.