März 29, 2024

பிரியந்த குமார : குழப்பி கொள்ள தேவையில்லை!

இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளையும், இந்த பாகிஸ்தான் சியால்கோட் பிரியந்த குமார படுகொலைகளையும் போட்டு குழப்பி கொள்ள தேவையில்லை என தெரிவித்துள்ளார் மனோகணேசன்.

தனிப்பட்ட முறையில் கொலைகள், தாக்குதகள் உலகம் முழுக்க நடக்கின்றன. ஆனால், இன, மத, மொழி அடிப்படையில் இவை நடக்கும் போதுதான் தலைப்பு செய்தியாகின்றன. அது சரிதான். இன, மதம் உணர்வுகள் போதை வஸ்து மாதிரி  ஆரம்பித்தால் முடிவுக்கு இலேசில் வராது.

சுதந்திர  இலங்கையில் தமிழருக்கு எதிரான இனரீதியான தாக்குதல்கள், படுகொலைகள் 1950 களில் ஆரம்பித்து, 1956, 1958, 1961, 1977, 1981, 1983 ஊடாக 2000கள் வரை தொடர்கின்றன.  தமிழராக பிறந்த ஒரே காரணத்தால், இனரீதியாக பல நூறு தமிழர்கள், சிறு குழந்தைகள் உட்பட, தாக்கப்பட்டு, தீக்குள் எரியப்பட்டு, கொலை செயயப்பட்டார்கள். தமிழ் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டார்கள். தமிழரின் சொத்துகள் எரியூட்டப்பட்டன. கொள்ளை அடிக்கப்பட்டன.

கொழும்பில் எங்கள்  சொந்த குடும்ப சொத்துகள் சூறையாடப்பட்டன. எனது நெருங்கிய உறவினர்கள் கொல்லப்பட்டார்கள்.

தென்னிலங்கை பாணந்துறை பகுதியில் ஒரு தமிழ் இந்து பூசகரை உயிரோடு கொளுத்திய  கொடுமையை நேரில் கண்ட ஒரு தமிழ் சிறுவன்தான், பிற்காலத்தில் உலகையே உலுக்கிய ஆயுத போராட்டத்தை இலங்கையில் நடத்தும் மனநிலைக்கு தள்ளப்பட்டான், என என் மறைந்த தந்தை வீ. பி. கணேசன் அடிக்கடி கூறுவார்.

சமகாலத்தில், திகன, அம்பாறை, அளுத்கம, மினுவாங்கொடை ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் திட்டமிட்டு கொல்லப்பட்டார்கள். தாக்கப்பட்டார்கள். அவமானப்படுத்தப்பட்டார்கள். முஸ்லிம் சொத்துகள் எரியூட்டப்பட்டன. பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன.

இவற்றை எல்லாம் கடந்து வந்துதான் இன்றைய நாளில் நான் வாழ்கிறோம். இலங்கை வாழ் தமிழருக்கு எதிராக இனரீதியாக இடம்பெற்ற, முஸ்லிம்களுக்கு எதிராக இனரீதியாக இடம்பெற்ற கொடுமைகளை எதிர்த்து, போராடும்,  நியாயம் கேட்கும் முகாமில்தான் நான் எப்போதும் இருக்கிறேன். இதற்காக எவருடனும் நான் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. அந்த வரலாறு எனக்கு ஒருபோதும் இல்லை.

சில வாரங்களுக்கு முன், அமெரிக்காவில் ஒரு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. சில வருடங்களுக்கு முன் அதிகாலை வேளையில் தெருவில் காலை உடற்பயிற்சிக்காக ஓடிக்கொண்டிருந்த ஒரு கறுப்பு அமெரிக்கரை சில வெள்ளை அமெரிக்கர்கள் சுட்டுக்கொன்றார்கள். கொலை செய்தோர் கைது செய்யப்பட்டு, வழக்கு நடந்தது. அமெரிக்காவில் கறுப்பு இன மக்களுடன் சேர்ந்து வெள்ளை இன மக்களும் தண்டனையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஊடகங்களும் பொது கருத்தை உருவாக்கின.

முழுக்க முழுக்க வெள்ளை ஜூரர்களை கொண்ட நீதிமன்றம் ஏகமனதாக தீர்ப்பு வழங்கி உச்சபட்ச தண்டனையை கொலைகாரர்களுக்கு  வழங்கியது. அமெரிக்காவை பற்றி எத்தனையோ குறைபாடுகள் கூறப்பட்டாலும், அமெரிக்காவில் இத்தகைய சட்ட அவகாசம் (Legal Space) சிறுபான்மையினருக்கு உண்டு என இச்சம்பவம் காட்டியது.

இத்தகைய நிலைமை  இலங்கையில் எப்போதும் இல்லை. சிறு குழந்தைகள் உட்பட தமிழ் குடும்பம் ஒன்றை வெட்டிக்கொலை செய்த இரத்னாயக்க என்ற இராணுவ சிப்பாய், எமது ஆட்சியில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, சட்டப்படி, தண்டனை வழங்கபட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த கொலையாளியை பதவிக்கு வந்ததும் இந்த ஜனாதிபதி விடுவித்தார். இலங்கையில் தமிழ், முஸ்லிம்களுக்கு எதிராக இனரீதியான கொடுமைகளை செய்த எந்தவொரு குற்றவாளிக்கும் இதுவரை இந்நாட்டில் தண்டனை வழங்கப்படவில்லை.

இலங்கை  வரலாறும், உலக  வரலாறும் இப்படி இருந்தாலும், அதற்காக, பிரியந்த குமார என்ற இலங்கையர் பாகிஸ்தானில் அடித்து, கொல்லப்பட்டதை  நியாயப்படுத்தவோ, அதை அலட்சியப்படுத்தவோ முடியாது.