März 29, 2024

இராணுவ அதிகாரி போன்று செயற்படுகின்றாரா தமிழரான வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா?

தற்போதைய வட மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா ஒரு தமிழர். ஆனாலும் அவர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வைத் தேடித்தராமல் ஒரு இராணுவ அதிகாரி போன்று செயற்படுகின்றாரா என்ற கேள்வி தற்போது வட மாகாண மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கு காரணம் இது தான் என எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சில நாட்களுக்கு முன்னர் மாதகலில் காணி அளவீட்டு பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என வடக்கு ஆளுநர் கூறியதாக வெளியான செய்தியை அடுத்து வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்றைய தினம் புதன்கிழமை காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே, எமது நிலம் எமக்கு வேண்டும்,காணிகளை சுவீகரிக்கதே, ஆளுநரே காணி அபகரிப்புக்கு உடந்தையாகாதே போன்ற பல்வேறு கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பபட்டது.

போராட்டம் இடம்பெற்ற அப்பகுதியில் பொலிசாரும், இராணுவத்தினரும், புலனாய்வுப் பிரிவினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.