April 20, 2024

இலங்கைக்கு படையெடுக்கவுள்ள மேலும் நான்கு விமான நிறுவனங்கள்

 

நான்கு புதிய விமான நிறுவனங்கள் அடுத்த மாதம் முதல் இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

அண்மையில் நான்கு புதிய விமான நிறுவனங்கள் இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, ரஷ்யாவின் AZUR விமான சேவையானது டிசம்பர் 03 ஆம் திகதி முதல் வாரத்திற்கு இரண்டு முறை இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது. AIR ASTANA கஜகஸ்தானில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானங்களை வாரத்திற்கு இரண்டு முறை அதே தினத்தில் இயக்கும்.LOT POLISH ஏர்லைன்ஸ் டிசம்பர் 08 முதல் இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது மேலும், NEOS விமான சேவை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் இத்தாலியில் இருந்து விமான சேவையை ஆரம்பிக்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களில், AEROFLOT மற்றும் AIR FRANCE உட்பட நான்கு புதிய விமான நிறுவனங்கள் இலங்கைக்கு தங்கள் நேரடி விமான சேவைகளைத் தொடங்கியுள்ளன.கொவிட் தொற்றுநோய்க்கு முன்னர் சுமார் 37 விமான நிறுவனங்கள் இலங்கைக்கு விமானங்களை இயக்கியதாகவும், இதுவரை 17 விமான நிறுவனங்கள் பயணிகள் விமானங்களை மீண்டும் தொடங்கியுள்ளன என்றும் பிரசன்ன ரணதுங்க கூறினார்.

எட்டு விமான நிறுவனங்கள் சரக்கு போக்குவரத்தை மீண்டும் தொடங்கியுள்ளன. இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கு முன்னர் இலங்கை வந்துள்ள அனைத்து நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இலங்கைக்கு நேரடி விமான சேவையை தொடங்குவது தொடர்பாக உலகெங்கிலும் உள்ள ஏனைய விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.