März 28, 2024

புலம்பெயர் தமிழர்களினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்- சார்ள்ஸ் நிர்மலநாதன்

pinterest sharing button
email sharing button
sharethis sharing button

பொருளாதார ரீதியாக பலமாகவுள்ள புலம் பெயர் தமிழர்களினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை போன்ற சிறிய நாட்டில் வருமானத்தை மீறிய மிகவும் பெரிய தொகையை, ஒவ்வொரு வருடமும் மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் பாதுகாப்புக்காக ஒதுக்குகின்றது. இதுவே இலங்கை தொடர்ச்சியாக பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகுவதற்கு முக்கிய காரணமாகும்.

இதேவேளை அரச சேவையாளர்கள் நாட்டிற்கு சுமை  என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் உண்மையாக படைத் தரப்பே சுமையாகும்.

ஆட்சியாளர்கள் தாங்கள் ஆட்சி செய்வதற்கு இராணுவத்தின் ஒத்துழைப்புக்கும் இராணுவத்தின் வாக்கு வங்கிக்காகவும்தான் நிதி ஒதுக்கீடு செய்கின்றார்கள்.

மேலும், அரச சேவையாளர்களில் நிபுணத்துவம் கொண்டவர்களை தவிர்த்து ஓய்வுநிலை இராணுவ அதிகாரிகளை அமைச்சின் செயலாளர்களாகவும் பணிப்பாளர்களாகவும் நியமித்து, நிபுணத்துவ அரச சேவையாளர்களை கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றமையினால், இன்று பல அமைச்சுக்களில் இருந்து நிபுணர்கள் பலர் தாமாக பதவி விலகியுள்ளார்கள்.

இதேவேளை நாட்டிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டம், வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு தடுக்கின்றது.

 

குறிப்பாக உலக பரப்பிலுள்ள இலங்கை தமிழர்கள், சொந்த மண்ணின் மீது மிகவும் பற்றுக் கொண்டவர்கள். அவர்கள் முதலீடு செய்வதற்கு முன்வந்தால், அவர்களை அச்சுறுத்துகின்றனர். இதனால் அவர்களின் முதலீடுகள் தடுக்கப்படுகின்றது.

மேலும் சுற்றுலாப்பிரயாணிகளாக அதிகளவு நாட்டுக்கு வருகை தருகின்றவர்கள் புலம்பெயர் தமிழர்களாவர். பொருளாதார ரீதியாக பலமாகவுள்ள அவர்களினால்தான் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.