தமிழ் தேசிய ஒற்றுமையை சிதைக்காதீர்:குருக்கள் துறவிகள்

தமிழ்த் தேசியப் பரப்பு மதவரையறைகளைக் கடந்து ஈழத்தமிழ் மக்களை ஈழத்தமிழ்த்தன்மையில் ஒருங்கிணைக்கின்றது.இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எமது தமிழ்த் தேசிய ஒற்றுமையை குலைக்க முயலும் ஆபத்துப்பற்றியும் நாம் அனைவரும் விழிப்பாயிருக்க வேண்டும். தமிழ் மக்கள் மத்தியிலே அண்மையில் அதிகரித்து வரும் மத முரண்பாடுகள் குறித்து விரைந்து செயற்பட்டு நல்லிணக்கத்தையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து பேண நாம் முன்வரவேண்டுமென வடக்கு-கிழக்கைச்சேர்ந்த நீதிக்கும் அமைதிக்குமான குருக்கள் துறவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு இயங்கிவரும் வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் கத்தோலிக்க மக்களின் கிறிஸ்தவ வாழ்வை பண்பாட்டு மயமாக்கி அதற்கான செயற்பாடுகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்துவதையும்,ஒட்டு மொத்த ஈழத்தமிழ் மக்களின் கூட்டுரிமைகளுக்காக குரல் கொடுப்பதையும், இலங்கைத் தீவில் நீதியில் அடித்தளமிடப்பட்ட அமைதியை நிலைநாட்டுவதற்காக உழைப்பதையும் நோக்காகக் கொண்டு செயற்பட்டுவருகிறது.

இந்நிலையில் அண்மையில் அவர்களால் வெளியிடப்பட்ட‘போரில் இறந்த அனைவரையும் நினைவு கூர்ந்து இறைவேண்டல் செய்வதற்கான அழைப்பு தமிழ் தேசியத்தரப்பில் பல எதிர்ப்பலைகளை உருவாக்கியிருப்பதை அவதானித்து நீதிக்கும் அமைதிக்குமான குருக்கள் துறவிகள்,வடக்கு-கிழக்கு’எனும் அமைப்பினராகிய நாம் மிகுந்த மனவேதனை அடைகின்றோம்.

ஈழத்தமிழ் மக்களின் விடிவுக்கான கத்தோலிக்க திருஅவையின் தொடர்

அர்ப்பணத்தை உறுதி செய்யும் முகமாக பின்வரும் கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றோம்.

நவம்பர் மாதம் இறந்த அனைவருக்காகவும் இறை வேண்டல் செய்யும் மாதமாக உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களால் காலங்காலமாக அனுசரிக்கப்பட்டுவருகிறது. இக்காலத்தில் கல்லறைகளை தரிசிப்பதையும் இறந்தவர்களுக்கான வழிபாடுகளை மேற்கொள்வதையும் கிறிஸ்தவ மக்கள் தமது கடமையாக கருதி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இத்தகைய ஒரு நீண்ட மரபின் ஒரு பகுதியாகவே நாம் வடக்கு-கிழக்கு ஆயர் மன்றத்தின் மேற்படி வேண்டுகோளை பார்க்கின்றோம். அதற்கு அப்பால் இதற்கு எந்தவித அரசியல் பரிமாணமும் இல்லை என்பதே எமது நிலைப்பாடு.

மேற்படி அழைப்பில் நவம்பர் மாத மூன்றாவது சனிக்கிழமையில் போரில் இறந்த அனைவருக்காகவும் செபிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததே தவிர நவம்பர் இருபதாம் திகதி என்றல்ல. இவ்வருடம் அது 20ம் திகதி வருகிறது என்பதற்கப்பால் இந்தினத்துக்கு வேறு முக்கியத்துவம் கிடையாது. ஊதாரணமாக அடுத்தடுத்த வருடங்களில் இது முறையே 19, 18, 17,எனமாறிவரும் என்பதை தெளிவுபடுத்தவிரும்புகிறோம்.

மே 18ஐ இதே ஆயர் மன்றம் ஈழத்தமிழ் இனப்படுகொலை நாளென பிரகடனப்படுத்தி நினைவு கூர கடந்த மேமாதத்தில் அழைப்புவிட்டிருந்ததையும்; இங்கு நினைவூட்ட விரும்புகிறோம். ஆகவே போரில் இறந்த அனைவருக்காகவும் இறை வேண்டல் செய்வதென்பது தமிழர் நெஞ்சங்களில் வாழும் மாவீரர்களையும், இன அழிப்புக்குள்ளான தமிழ் மக்களின் தியாகங்களையும்; சமரசம் செய்வதாகாது. ஏற்கனவே தமிழ் மக்கள் நினைவு கூருகின்ற நாட்களில் அவர்களை நினைவு கூர்வது வரலாற்றுக் கட்டாயம் என்பதையும் வலியுறுத்துகின்றோம்.

தமிழ்த்தேசியப் பரப்பு மத வரையறைகளைக் கடந்து ஈழத்தமிழ் மக்களை ஈழத்தமிழ்த்தன்மையில் ஒருங்கிணைக்கின்றது. இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எமது தமிழ்த் தேசிய ஒற்றுமையை குலைக்க முயலும் ஆபத்துப்பற்றியும் நாம் அனைவரும் விழிப்பாயிருக்க வேண்டும். தமிழ் மக்கள் மத்தியிலே அண்மையில் அதிகரித்து வரும் மத முரண்பாடுகள் குறித்து விரைந்து செயற்பட்டு நல்லிணக்கத்தையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து பேண நாம் முன்வரவேண்டும்.

எதிர் காலத்தில் இத்தகைய தவறான புரிதல்களை தவிர்க்கும் முகமாக வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம்,தமிழ்த் தேசியம் சார் விடயங்களில் வடக்குகிழக்கில் உள்ள ஏனைய சமயத் தலைவர்களோடும்,சிவில் சமூக அமைப்புக்களோடும் நெருக்கமான ஒத்துழைப்பை தொடர்ந்து பேணும் என எதிர்பார்க்கின்றோம்.

இறுதியாக ஈழத்தமிழர்களின் கூட்டு நினைவுகூர்தல் என்பது தமிழ்த் தேச கட்டுமானத்தின் பிரிக்கமுடியாத அங்கமாக உள்ளது என்பதை நினைவூட்டி,ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான எமது தொடர் அர்ப்பணத்தையும் அனைத்துத் தரப்புக்கும் மீண்டுமொருமுறைஉறுதிசெய்கின்றோமென தெரிவிக்கப்பட்டுள்ளது.