März 28, 2024

சதிகளிற்கு பலியாகாதீர்கள்:சிவில் அமைப்புக்கள்!

தமிழ் மக்கள் தேசமாக ஒன்றிந்து எழவேண்டிய இப்போதைய சூழலில் அகப்பிரச்சினைகளை புறப்பிரச்சினைகளை கையாள்வது போல கையாளக்கூடாதென வடகிழக்கு சிவில் அமைப்புக்கள் கோரியுள்ளது.

வடகிழக்கு சிவில் அமைப்புக்கள் சார்பில் மூத்த அரசியல் ஆய்வாளரும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தை சேர்ந்தவருமாக ஆ.யோதிலிங்கம் யாழ்.ஊடக அமையத்தில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

அங்கு கருத்து வெளியிட்ட அவர் தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தில் ஆயர்களதும் கத்தோலிக்க துறவிகளதும் பங்களிப்பு வார்த்தைகளால் சொல்லிவிடக்கூடியதொன்றல்ல.வணபிதா கருணாரத்தினம் அடிகளார் முதல் இறுதி யுத்தத்தில் உயிர்தியாகங்கள் புரிந்த துறவிகளென நீண்ட வரலாறு எம்மிடையே உள்ளது.அதிலும் இனஅழிப்பு தொடர்பிலான மன்னார் ஆயரின் வாக்குமூலம் எத்தகைய பெறுமதி மிக்கதென்பது அனைவருக்கும் தெரியும்.

அதனாலேயே மனம் நோகத்தக்க கருத்துக்களை எவரையும் பொது வெளியில் முன்வைக்க வேண்டாமென பகிரங்கமாக இத்தகைய சூழலில் நாம் கோரிநிற்கின்றோம்.

அதிலும் தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தில் இன்று வரை எந்தவொரு பங்கெடுப்பையோ அல்லது துரும்பையோ தூக்கிப்போட்டிராத இந்து மத தலைவர்கள் என தம்மை சொல்லிக்கொள்பவர்கள் கூட காட்டமாக கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர்.

உண்மையில் வடகிழக்கு ஆயர்களது பொது அறிக்கை தொடர்பில் அனைவரும்; பேசி  பொது முடிவுக்கு வரக்கூடியதொன்றே.

இந்நிலையில் தமிழ் மக்கள் தேசமாக ஒன்றிந்து எழவேண்டிய இப்போதைய சூழலில் அகப்பிரச்சினைகளை புறப்பிரச்சினைகளை கையாள்வது போல கையாளக்கூடாதென ஆ.யோதிலிங்கம் அழைப்புவிடுத்துள்ளார்.