März 28, 2024

திரு.யோ.சிறிரவிந்திரநாதன் (சிறிரவி) அவர்கட்கு! சு.சுந்தரலிங்கம் நிர்வாகி ம- த- தே- செயற்பாட்டாளர் கஸ்ரொப் – றவுக்சல்

கஸ்ரொப்-றவுக்சல், யேர்மனி
19.11.2021
திரு.யோ.சிறிரவிந்திரநாதன் (சிறிரவி) அவர்கட்கு!
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு,
யேர்மனி.

அன்புடையீர்!

தங்களின் 12.11.2021 திகதியிடப்பட்டு மின்னஞ்சல் மற்றும் புலனம் (Whatsapp) ஆகியவற்றினூடாக ஆதாரமற்றதும் தெளிவற்றதுமான காரணங்களைக் குறிப்பிட்டு எனக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எழுதியனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை கிடைக்கப்பெற்று இயல்பாக வாசித்தறிந்து கொண்டேன். நீண்ட காலமாக தேசியம் என்ற இலட்சியத்தினை மனதில் கொண்டு செயற்பட்ட என்மீது எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைக்கான தீர்மானமானது குறுகிய காலப்பகுதிக்குள் உங்களின் சுயசிந்தனையின்றி எழுதப்பட்டதென்பதனை நான் நன்கு அறிவேன். 02.10.2021 அன்று Dortmund தமிழாலயத்தில் Oberhausen சங்கர் என்பவரினால் பாலகிருஷ்ணன் மற்றும் Dortmund நகர மக்கள் முன்னிலையில் எனக்கெதிராகப் பாவிக்கப்பட்ட சொற்பிரயோகத்தின் பிரதிபலிப்பின் மறுவடிவம் தான் இவ்வறிக்கையாகும். அதனால் இவ்வறிக்கையானது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கவோ அன்றி குழப்பமுண்டாக்கவோ இல்லை.

அவ்வாறாயின்; நிதிக்கையாடல்கள் ஒழுக்கச்சீர்கேடுகள் போன்றவற்றில் ஈடுபட்ட, ஈடுபட்டுக்கொண்டிருக்கும் உங்களின் கீழ் இயங்கும் அமைப்புக்களின் பொறுப்பாளர்கள் செயற்பாட்டாளர்களுக்கு நீதியின் முன்நிறுத்தி கொடுக்கப்படும் நடவடிக்கை எதுவாக இருக்குமென எதிர்பார்க்கின்றேன். ஓழுக்காற்று நடவடிக்கை என்ற சொற்பதத்தை பிரயோகிப்பதற்கு மக்கள் மனங்களில் நிறைந்த தேசியத்தலைவர் அவர்களைத் தவிர்த்து யாருக்கும் தகுதியில்லை.

திரிவுபடுத்தப்பட்ட பாடநூலை மீளப்பெறும் வரை தமிழ்க் கல்விக் கழகத்தினுடன் இணைந்து செயற்படாது தனித்து நின்று இயங்கியமை என்ற ஒரு வரலாற்றுக் காரணத்துக்காக தங்களால் என்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து அனைத்துப் பொறுப்புக்களிலும் இருந்து மறு அறிவித்தல் வரை நீக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருப்பதானது உங்கள் செயற்பாடுகளிலிருந்து நான் விலகி நிற்பதனை இலகுவாக மக்களுக்கு வேறுபடுத்திக்காட்டுவதற்கு பேருதவியாக அமைந்தது.

நகரத்தின் செயற்பாட்டாளனாக மக்களுடன் இணைந்து செயற்பட்ட ஒருவனுக்குத்தான் அதன் வலியும் வேதனையும் தெரியும். நேரடியாகப் பொறுப்பில் வந்து அமர்ந்தவர்களுக்கு அதன் வலியும் வேதனையும் தெரிய வாய்ப்பில்லை. உங்களைப் போல் தேசியத்தின் பின்னணி தெரியாது இடையிட்டு வந்து தேசிய நீரோட்டத்தில் இணைந்தவன் நானல்ல என்பது உங்களுக்கு மட்டுமல்ல தேசியத்தலைவர் அவர்கட்கும் தெரிந்த விடயம். எனது நகரத்தில் மட்டுமல்ல யேர்மனியில் தேசிய நீரோட்டத்தில் ஆரம்ப மழைத்துளிகளாகச் சேர்ந்து பலம் சேர்த்தவன் என்பதனை நீங்களும் உங்களைப் போல இடையிட்டு வந்து புகுந்தவர்களுக்கும் சிலவேளை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இயக்கத்தை நம்பி நாங்களில்லை, எங்களை நம்பித்தான் இயக்கம் வளர்ந்தது என்ற கோட்பாட்டிற்கமைவாக இதுவரை காலமும் எனது சொந்த உழைப்பை நீராக ஊற்றி தேசியம் என்ற இறுக்கமான கொள்கைக்குள் நின்று அமைப்பைக் கட்டிக்காத்து வளர்த்துவிட்ட பெருமை எனக்குரியது. உங்களைப் போன்றவர்கள் போன்று மக்கள் பணத்தில் வாழ்ந்து அமைப்பை வளர்த்தவன் நானில்லை என்பதனை நீங்களும் நன்கு அறிந்து வைத்திருப்பீர்கள் என்பதில் எள்ளளவும் ஜயமில்லை.

எனக்கெதிராக உங்களால் வெளியிடப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைக்கான அறிக்கையை பார்த்து வாசித்த, கருத்து முரண்பாடு காரணமாக அமைப்பிலிருந்து விலகி வெளியேறிய பல பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் இன்றும் தங்களுடன் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கும் பணியாளர்கள் பலரும் என்னுடன் தொடர்புகளை மேற்கொண்டு ஆரம்பகாலம் தொட்டு தங்களுடன் இணைந்து செயற்பட்ட அனுபவங்களையும் செயற்பாட்டுத் திறமைகளையும் கூறி என்னை மென்மேலும் உற்சாகப்படுத்தி எனது இயல்பை அறிந்து எனது நோக்கமும் பாதையும் தெளிவானதும் நேர்த்தியானதுமென வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

திரிவுபடுத்தப்பட்ட பாடநூலை மீளப்பெறுமாறு தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் என்னைப் போன்றவர்கள் மீது நடாத்தப்படும் தனிமனிதத் தாக்குதல்கள்,பெண்கள் மற்றும் பிள்ளைகளை இழிவுபடுத்தும் விதமாக முகவரியிடப்படாத கடிதங்கள் மூலமான பிரச்சார நடவடிக்கைகள், காட்டிக்கொடுப்புகள் ஆகிய அனைத்துக்கும் உங்கள் ஆளுமைக்குப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் தமிழ்க் கல்விக் கழகமும் முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளவேண்டிய சூழ்நிலை உருவாகி வருவதனை நீங்கள் நன்கு அறிவீர்களென நான் நம்புகின்றேன்.

அதிகாரம் இருக்கும்வரை தான் ஒருவரது ஆளுகை என்பதனையும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்பது தனிமனித சொத்தல்ல என்பதனையும் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தப் புனித அமைப்பின் பெயருக்குக் களங்கமேற்படுவதை ஒரு போதும் தமிழினம் அனுமதிக்காது.

நான் வாழும் கஸ்ரொப்-றவுக்சல் நகர மக்கள் எனது குடும்பத்தின் மீதும்,தமிழீழத் தேசியத்தலைவரையும் மாவீரர்களையும் மனதில் நிலைநிறுத்தி உண்மையோடு என்னால் மேற்கொள்ளப்பட்ட தேசியச் செயற்பாட்டின் மீதும்,தமிழ்ப்பணி மீதும் அளவற்ற நம்பிக்கையும் உறுதியும் கொண்டுள்ளார்கள் என்பதனை கடந்த 13.11.2021அன்று எமது நகரத்தின் தமிழாலயத்தை முறையற்ற விதத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக உங்களால் நடாத்தப்பட்ட சந்திப்பின் போது நேரடியாக ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் தெளிவு கிடைத்திருக்குமென எண்ணுகின்றேன்.

அந்தவகையில்;எனது நகரமக்களை நான் ஒருகணம் தலைசாய்த்து வணங்கிக் கொள்கின்றேன். யேர்மனிக்கிளையின் அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் என்னை விலக்கி வைத்திருப்பினும், தேசியத்தலைவரின் சிந்தனைக்கமைவாகவும், மாவீரர்களின் கனவுகளுக்கமைவாகவும் ஒன்றுபட்ட எனது நகரமக்களின் ஒத்துழைப்புடன் எனது தேசியப்பணி மற்றும் கல்விப்பணியை தொடர்ந்து செயலாற்றுவேன் என்று உறுதியோடு கூறிக்கொள்கின்றேன்.

நன்றி.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

அன்புடன்

சு.சுந்தரலிங்கம்
நிர்வாகி மற்றும் தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர்
கஸ்ரொப் – றவுக்சல்
யேர்மனி.

பிரதிகள்:-
1. பொறுப்பாளர் அனைத்துலகச் செயலகம்-தங்களின் கவனத்திற்கு
2. தேசியம்,கல்வி சார்ந்த அனைத்துப் பொறுப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள்-தகவலுக்கு
3. நகர மக்கள்-தகவலுக்கு