April 18, 2024

விமானப்படை அழித்ததிற்கும் மீட்சி!

இலங்கை விமானப்படை குண்டுவீச்சில் அழிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பழைய கச்சேரியின் கட்டிடத்தொகுதியை பாதுகாத்து புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்திருந்த, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்  விதுர விக்கிரமநாயக்க ,யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களின் வேண்டுகோளின்படி, இக்கட்டிடத்தொகுதியை பாதுகாக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

யாழ்ப்பாணத்தின் நிர்வாக கட்டமைப்பின் வரலாற்றை பிரதிபலித்து நிற்கும் “யாழ் பழைய கச்சேரி” தொகுதியானது நிச்சயமாக பாதுகாக்கப்படவேண்டிய ஒன்று எனவும், எதிர்கால சந்ததிக்கு கொடுக்கப்படவேண்டிய ஒன்று எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இதனை பாதுகாத்துப் பேணி மீண்டும் அதே வடிவத்தில் புனரமைப்பு செய்வதற்கான திட்டங்களை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்மொழிவதுடன், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம், தொல்லியல் துறையினரின் முழுமையான பங்களிப்போடு இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, மக்களின் பார்வைக்காக திறந்து விடப்படும் என்றும் அமைச்சர் கௌரவ விதுர விக்கிரமநாயக்க அவர்கள் தெரிவித்தார்.