April 25, 2024

72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மாஸ் வெற்றி!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்.

சூப்பர்12 சுற்றில் இன்று ஷார்ஜாவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முகம்மது ரிஸ்வானும், பாபர் அசாமும் களமிறங்கினர்.

ரிஸ்வான் 15 ஓட்டங்களில் வெளியேற, பாபர் வழக்கம்போல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 66 ஓட்டங்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இறுதியில் ஹபீஸ் மற்றும் மாலிக் அதிரடி காட்ட, பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் குவித்தது.

ஷோயப் மாலிக் 18 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்சருடன் 54 ஓட்டங்களை விளாசினார். ஸ்காட்லாந்து தரப்பில் கிறிஸ் க்ரீவ்ஸ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து 190 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணியின் சார்பில் ஜார்ஜ் முன்சே மற்றும் கைல் கோட்சர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

அந்த ஜோடியில் கைல் கோட்சர் 9 ஓட்டங்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மேத்யு கிராஸ் 5 ஓட்டங்களும், ஜார்ஜ் முன்சே 17 ஓட்டங்களும், டைலன் பட்ஜ் ஓட்டம் ஏதும் எடுக்காமலும், மைக்கேல் லீஸ்க் 14 ஓட்டங்களிலும், கிரிஸ் கிரேவ்ஸ் 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனிடையே மறுமுனையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை பதிவு செய்திருந்த ரிச்சி பெர்னிங்டன் 54 (37) ஓட்டங்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியில் 20 ஒவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 117 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷதப் கான் 2 விக்கெட்டுகளும், ஹரிஸ் ராவ்ப், ஷாகீன் அப்ரிதி மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இது பாகிஸ்தானின் 16-வது தொடர்ச்சியான வெற்றியாகும் மற்றும் டி 20 உலகக் கோப்பை தொடரில் இது 5-வது வெற்றியாகும்.

இப்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த பாகிஸ்தான், வரும் நவம்பர் 11-ஆம் திகதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

அதேசமயம், ஸ்காட்லாந்து அணி இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாமல் சோகத்துடன் வெளியேறினர்.