März 29, 2024

மக்களுக்கு போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை! (லண்டன் )

லண்டனில் ஏ.டி.எம் பயன்படுத்தும் பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் – க்ரீன்விச் பகுதியில் ஏ.டி.எம் இயந்திரங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடியினால் பணத்தை இழந்த நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏ.டி.எம் இயந்திரத்தில் அட்டையை செலுத்தி பணத்தை வெளியே எடுக்க முயற்சிக்கும் போது, பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.

பணம் வெளியில் வராதவகையில் மோசடியாளர்கள் ஏ.டி.எம் இயந்திரத்திற்குள் சில செயற்பாடுகளை மேற்கொள்வது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தெற்கு லண்டனில் இது குறித்த மோசடிகள் வெளியானதை தொடர்ந்து விழிப்புணர்வுக்காக சிலர் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வந்தனர்.

“நான் பணத்தை எடுக்க முயற்சித்தேன். ஆனால் பணம் வெளியே வரவில்லை. நீண்ட நேரம் முயற்சி செய்த போதிலும் பணத்தை எடுக்க முடியவில்லை” என பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

நான் வங்கிக்கு அழைப்பை ஏற்படுத்தினேன், இதன் போது ஏ.டி.எம் இயந்திரத்தை சற்று உண்ணிப்பாக அவதானித்தேன். இயந்திரம் சற்று வித்தியாசமாக இருந்ததை அறிந்துகொண்டேன்.

ஏ.டி.எம் இயந்திரத்தில் ஏதோ ஒன்று ஒட்டியிருந்ததை அவதானித்தேன். அதனை அகற்றினால் அதற்குள் பணம் இருப்பது தெரிந்தது. எனினும், பணத்தை வெளியே எடுக்க முடியவில்லை.

இந்த நேரத்தில் கார் ஒன்றில் வந்த இரண்டு மூன்று பேரை அவதானித்தேன். இந்த மோசடி கும்பல் ஒன்றினால் மேற்கொள்ளப்படுவதாக” பாதிக்கப்பட்ட நபர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் அதிகளவானோர் வசிப்பதன் காரணமாக இந்த விடயம் குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.