April 25, 2024

அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகம் WhatsApp Web-ல் புதிய அப்டேட்!

வாட்ஸ்அப் வெப் அம்சத்தில் 3 புதிய வசதிகளை கொண்டு வந்துள்ளதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

உலக அளவில் 2 பில்லியன் பயனர்கள் பயன்படுத்த கூடிய WhatsApp செயலி பல தரப்பு மக்களுக்கு எளிதாக பயன்படுத்த கூடிய வகையில் உள்ளதால் அனைவருக்கும் பிடித்தமான மெஸேஜிங் செயலியாக விளங்குகிறது.

இதில் தரப்பட்டுள்ள ஸ்டேட்டஸ் வசதி, ஸ்டிக்கர்ஸ், தரமான வீடியோ – ஆடியோ காலிங் வசதி, வாட்ஸ்அப் வெப், எமோஜிகள் போன்ற முக்கிய அம்சங்கள் தான் இந்த அளவிற்கு வாட்ஸ்அப் பிரபலமாவதற்கு காரணம்.

ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவேளையில் வாட்ஸ்அப் செயலி சில முக்கிய அப்டேட்களை தருவது வழக்கம்.

அந்த வரிசையில் Browser-ல் பயன்படுத்த கூடிய வாட்ஸ்அப் வெப் அம்சத்தில் 3 புதிய வசதிகளை கொண்டு வந்துள்ளதாக வாட்ஸ்அப் செயலியின் தலைமை நிறுவனமான Facebook (தற்போது ‘Meta’ என பெயரிடப்பட்டுள்ளது) தெரிவித்துள்ளது.

வரும் மெசேஜ்களை ஒவ்வொரு முறையும் ஸ்மார்ட் போனை திறந்து பார்க்க வேண்டிய தேவையை இந்த WhatsApp Web அம்சம் குறைத்தது. குறிப்பாக அலுவலக பணி செய்வோருக்கு இந்த வாட்ஸ்அப் வெப் மிக பயனுள்ளதாக இருக்கிறது.

ஆரம்பத்தில் இதில் வெறும் மெசேஜ்களை பார்க்கவும், அதற்கு பதிலளிக்கும் வசதி மட்டுமே இருந்தது. பிறகு சில அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வந்தது. அந்த வகையில் தற்போது மீண்டும் 3 முக்கிய அப்டேட்களை வாட்ஸ்அப் வெப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது.

1- இதனால் தற்போது நீங்கள் பகிரக் கூடிய போட்டோக்களில் உங்களுக்கு தேவையான ஸ்டிக்கர்கள் மற்றும் எழுத்துக்களை நீங்கள் சேர்த்து கொள்ளலாம். மற்றும் போட்டோவை கிராப் (Crop) செய்யும் வசதியும் இதில் தந்துள்ளனர். இப்படி எடிட் செய்த போட்டோக்களை உங்கள் கணினியில் இருந்தே யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

2- உங்களுக்கு பிடித்தமான எண்ணற்ற ஸ்டிக்கர்களை பகிரக்கூடிய வசதியும் இந்த அப்டேட்டில் தந்துள்ளனர். எனவே இனி எந்த ஸ்டிக்கரை யார் வேண்டுமானாலும் சேமித்து கொண்டு அதை உங்கள் நன்பர்கள்/உறவினர்களுக்கு அனுப்பலாம். மேலும் எமோஜிகளும் இம்முறை அப்டேட்களுடன் வருகின்றன. உங்களுக்கு பிடித்த ஸ்டிக்கர் மற்றும் எமோஜியை டைப் செய்வதன் மூலமும் இவற்றை நீங்கள் பரிந்துரையாக பெறலாம்.

3- இந்த புதிய அப்டேட்டில் நீங்கள் பகிரும் லிங்க்-களுக்கு Preview காட்டும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக செய்திகள், வீடியோக்கள், ட்விட்டர் பதிவுகள் போன்றவற்றை பகிரும்போது அதில் பிரிவியூவ் காட்டப்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் சில பிழைகளை இந்த அப்டேட்டில் சரிசெய்துள்ளது. இந்த புதிய அப்டேட்கள் பற்றி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் நவம்பர் 1-ஆம் தேதி அன்று பதிவிட்டுள்ளது.