April 19, 2024

நெகிழ்ச்சியாக ஈழத்தமிழர்கள் தொடர்பில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர்!

இலங்கைத் தமிழர்கள் தன்னை உடன் பிறப்பாக ஏற்றுக்கொள்ளலாம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் நலனுக்காக புதிய வீடுகள் கட்டித் தருதல், கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதி உள்ளிட்ட நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதற்கமைய தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்  தொடக்க விழா நேற்றைய தினம் வேலூர் மாவட்டம் மேல்மொணவூர் இலங்கை தமிழர் முகாமில் நடைபெற்றது.

விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு  அத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து உரையாற்றியிருந்தார்.

அதன் போது கருத்துத் தெரிவித்த அவர்,

இலங்கைத் தமிழர்கள் அகதிகளும் அல்ல, அனாதைகளும் அல்ல, அவர்களும் நம்மில் ஒருவர், அது மட்டுமன்றி என்னை அவர்கள் தங்களின் உடன் பிறப்பாக ஏற்றுக் கொள்ளலாம் என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் சுமார் 142 கோடி ரூபாய் மதிப்பில், 3,510 புதிய குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. இதுதவிர, முகாம்களில் குடிநீர், சாலை, கழிப்பிடம் உள்ளிட்ட இதர அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்கான 30 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி வைத்தார்.

மேலும், 53 கோடியே 51லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு, குடும்ப அட்டை, மகளிர் சுய உதவி குழுவினருக்கு நிதியுதவி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் தொழில் பயிற்சி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, மேல்மொணவூர் இலங்கை தமிழர் குடியிருப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர், அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளையும் கேட்டறிந்தார்.