März 29, 2024

14 வருடங்களாக தேடுவாரற்று கிடக்கும் கலாச்சார மண்டபம்

யாழ்.பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உடபட்ட ஆத்தியடி பிள்ளையார் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பருத்தித்துறை கலாச்சார மண்டபம் 14 வருடங்கள் கடந்தும் திறக்கப்படாமல் உள்ளது.

வடமாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒரு கோடிக்கு அதிகமான நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட குறித்த கட்டடம் அதிகாரிகளின் முறையற்ற செயற்பாட்டினால் திறக்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றது.

2008 ஆண்டு பருத்தித்துறை ஆத்தியடியைப் பிள்ளையார் ஆலய தர்மகர்த்தா சபைக்கும் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்திற்குமிடையில் 1049ஆம் இலக்கப் உறுதி பத்திரத்தின் படி 99 ஆண்டு கால குத்தகைக்கு மாதம் 500 ரூபாய் வாடகையாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

2011ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாவதாக செய்யப்பட்ட ஒப்பந்தம் பருத்தித்துறை கலாச்சார மண்டப தரப்பினரையும் அப்பகுதி மக்களையும் பாதிக்கும் வகையில் மேற்கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

பருத்தித்துறையில் சுமார் 14 ஆயிரத்து 575 குடும்பங்களைச் சேர்ந்த 46 ஆயிரத்து 925 பேரின் விருப்பங்களை அறியாது இரண்டாவதாக செய்யப்பட்ட உடன்படிக்கை அமைந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

வடக்கு மாகாணசபையின் மக்கள் வரிப்பணத்தில் பெறப்பட்ட நிதியில் கட்டப்பட்ட குறித்த கட்டடம் பல ஆண்டுகாலமாகத் திறக்கப்படாமல் உள்ளமை அதிகாரிகளின் வினைதிறனற்ற செயற்பாட்டயே எடுத்துக்காட்டுகிறது.

குறித்த விடயம் தொடர்பில் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரசேச செயலாளரைத் தொடர்பு கொண்டபோது குறித்த பிரச்சினை தொடர்பில் இணக்கப்படு ஒன்றை தாம் எட்டியிருப்பதாகவும் விரைவில் குறித்த கலாச்சார மண்டபம் திறக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.