März 28, 2024

நாளை இலங்கை வருகிறது ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு!

 

நாளை (திங்கட்கிழமை) இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய தூது குழுவொன்று உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தரவுள்ளது.

இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உட்பட அரசாங்கப் பிரதிநதிகள், எதிர்க்கட்சித்தலைவர், எதிர் அணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இலங்கை அரசாங்கமானது 2017ஆம் ஆண்டு இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்பபடும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.

அதன் பின்னர் கடந்த ஜுன் மாத நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராமன்றத்தில் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் காணப்படும் நிலைமைகள் தொடர்கவும் குறிப்பிடப்பட்டு தீர்மானம் நிறைவேற்ப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதா இல்லையா என்று மேற்படி ஐவர் கொண்ட குழு அறிக்கையொன்றை தயாரித்து ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது.

இதேவேளை, இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டம் சம்பந்தமாக அமைத்துள்ள குழுக்களின் செயற்பாடுகளையும் அவற்றின் அறிக்கைளையும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவிடத்தில் வெளிப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், 500மில்லியன் டொலர்களுக்கான வர்த்தகத்துக்கான சலுகை வரி கிடைக்குமென எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டள்ளார்.

இதேவேளை, இலங்கையிலிருந்து 2.7பில்லியன் பெறுமதியுடைய 45சதவீதமான தைத்த ஆடைகள் உள்ளிட்டவை ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கின்றன. இவ்வாறான நிலையில் இலங்கைக்கான ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையானது முதற் தடவையாக 2005ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.

மனித உரிமைகள் விடயங்கள், உள்நாட்டு யுத்தம் ஆகிய காரணங்களால் இந்த நிலைமை ஏற்பட்டது. பின்னர் நல்லிணக்க முயற்சிகளில் தோல்வி கண்டமை, மனித உரிமைகள் விவகாரங்களில் பின்னடைவு ஆகியவற்றைக் காரணம் காண்பித்து 2010ஆம் ஆண்டும் இந்த வரிச்சலுகை கிடைத்திருக்கவில்லை.

எனினும் 2015இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் 2017ஆம் ஆண்டு ஜி.எஸ்.பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே தொடர்ந்தும் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதச் சட்டம் ஆகியன அமுலிலேயே உள்ளன. அவை பற்றிய கரிசனைகளைக் கொண்டிருக்கும் ஐ.ரோப்பிய ஒன்றியம் நேரடியான ஆய்வுகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.