April 18, 2024

ஊரடங்குநேரத்தில் பட்டப்பகலில் இடம்பெற்ற வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்

ஊரடங்கு அமுலில் உள்ளவேளை பட்டப்பகலில் நடுவீதியில் இடம்பெற்ற வாக்குவாதம் காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் படு காயமடைந்த கல்முனை இளைஞன் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் .

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை மதரஸா வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று புதன்கிழமை (22) காலை பொதுமுடக்கம் அமுலில் உள்ள நிலையில் தன்னுடைய வீட்டுக்கு முன்னால் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர்களை நிறுத்தி வேகமாக வாகனத்தை ஓட்டவேண்டாம் என்று தாக்குதலுக்குள்ளான இளைஞனின் தரப்பு அறிவுரை கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பின்னர் அவ்விடத்திற்குச் சென்ற மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர்கள் வாள்களினால் அவ்விடத்தில் உள்ளவர்களை வெட்டி காயப்படுத்தியுள்ளனர்.

இதனால் 19 வயது மதிக்கத்தக்க முஹம்மத் ஸபான் என்பவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனை காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் வீட்டு வாயில் கதவு போன்றவற்றில் வெட்டுத்தடயங்கள் உள்ளதையும் இரத்த தடயங்கள் உள்ளதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

மேலும் அங்கு கிடைக்கப்பெற்ற காணொளி ஒன்றில் கோபத்துடன் இரு இளைஞர்கள் தாக்குதல் நடத்துவது பதிவாகியுள்ளதை காண முடிவதுடன் மேலதிக விசாரணையை கல்முனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.