März 28, 2024

மருத்துவ உதாசீனம்:சடலங்களை தேடும் அவலம்!

வவுனியாவில் கொரோனா தொற்றால் மரணமடைந்த இருவரின் உடல்கள் வவுனியா வைத்தியசாலையில் உறவினர்களிடம் மாறி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக பலரும் வவுனியா வைத்தியசாலையில் உள்ள கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு சிகிச்சை பெற்று வந்தவர்களில் கடந்த செவ்வாய் கிழமை  நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜா என்பவர் மரணமடைந்துள்ளார். நேற்று  புதன் கிழமை தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த சண்முகலிங்கம் என்பவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதில் இருந்து இருவரையும் அவர்களது உறவினர்கள் வைத்தியசாலையில் பார்வையிட அனுமதிக்கப்படாத நிலையில்,இறுதியில் அவர்கள் மரணமடைந்த செய்தியே அவர்களுக்கு கிடைத்தது. சண்முகலிங்கம் என்பவரின் குடும்பத்தினரை அவரது உடலை அடக்கம் செய்வதற்காக வைத்தியசாலை தரப்பினர் அழைத்திருந்தனர். அவர்கள் தமது குடும்பத்தவரின் உடலை தகனம் செய்வதற்காக பெட்டி மற்றும் ஆடைகளை வாங்கிச் சென்று வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இதன்போது சண்முகலிங்கத்தின் குடும்பத்தினர் தம்மிடம் காட்டப்பட்ட சடலத்தை பார்வையிட்ட போது அது வேறு ஒரு நபருடையது என்பது தெரியவந்துள்ளது.தமது உறவினர் இல்லை என அவர்கள் வைத்தியசாலையில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த சடலம் யாருடையது என தேடியபோது செல்வராஜா என்பவருடையது என தெரியவந்துள்ளது. செல்வராஜாவுக்கு பதிலாக அவர்களது உறவினர்களிடம் சண்முகலிங்கம் என்பரது சடலம் வழங்கப்பட்டு அது அப்போது எரியூட்டப்பட்டிருந்ததுடன்,

செல்வராஜாவின் குடும்பத்தினர் சண்முகலிங்கத்தின் சடலத்தை அடக்கம் செய்து விட்டு அதன் அஸ்தியை இறுதிச் சடங்குகளுக்காக எடுத்துச் சென்றிருந்தனர்.

ஆனால் சண்முகலிங்கம் அவர்களின் குடும்பத்தினர் தமது உறவினரின் சடலம் தேவை என வைத்தியசாலையில் முரண்பட்டதுடன், இறுதியில் செல்வராஜா குடும்பத்தினரிடம் சண்முகலிங்கத்தின் அஸ்தியை பெற்றுக் கொள்ள சம்மதித்தனர். இதனையடுத்து செல்வராஜாவின் குடும்பத்தினர் அவரது உடலை பெற்று மீண்டும் மயானத்திற்கு சென்று தகனம் செய்ய இணங்கினர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து கணவனை காணாத மனைவி மற்றும் பிள்ளைகள், உறவினர்கள் இறுதியாக அவரது உடலை கூட எரியூட்ட முன் ஒரு தடவை பார்வையிட முடியாமல் வைத்தியசாலை செய்து விட்டதாக கவலை வெளியிட்டுள்ளதுடன், இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளால் பலரும் இறந்தவர்களுக்கான ஆத்ம சாந்தி கிரியைகளைக் கூட செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி க.ராகுலன் அவர்களை ஊடகவியலாளர்கள் கேட்ட போது, ஒரு தவறு நடந்து விட்டது. தற்போது உறவினர்களுடன் கலந்துரையாடி அஸ்தியைப் உரியவர்களிடம் பெற்றுக் கொடுத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.