April 18, 2024

„பாதுகாப்பாக இருங்கள்“ என்ற தொனிப்பொருளில் கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

கிளிநொச்சி ஊடக மையத்தினால் ஆரம்பிக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டமானது இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமானது.
கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்த சுகாதார துறையினர், ஊடகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள், பொதுமக்களின் ஆத்ம சாந்திக்கான விசேட ஆத்ம சாந்தி பிரார்த்தனையும், கொவிட் பாதிப்பிலிருந்து நாடும், உலகமும் பாதுகாக்கப்படவும் விசேட வழிபாடும் இன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டை தொடர்ந்து புனித திரேசா ஆலயத்திலும் ஊடகவியலாளர்கள் விசேட வழிபாட்டில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, குறித்த வேலைத்திட்டத்தின் முதல் நாளான இன்றைய தினம் கிளிநொச்சி கல்வி, கலாசார அபிவிருத்தி அமையத்துடன் இணைந்து சுகாதார பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிமனையில் கர்ப்பவதிகளிற்கான மாதாந்த சிகிச்சைக்கு வருகை தந்திருந்தவர்களிற்கு முக கவசங்கள், தொற்று நீக்கி திரவங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து சதோச விற்பனை நிலையம், மீன், மரக்கறி விற்பனை நிலையங்களில் கூடியிருந்த மக்கள், ஊழியர்கள், வர்த்தகர்களிற்கும் முக கவசங்கள், தொற்று நீக்கி திரவங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை கூட்டமாக நிற்றலை தவிர்க்கவும், சமூக இடைவெளிகளை பின்பற்றி கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருந்து பாதுகாப்பாக செயற்படுமாறு அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் மக்களுக்கு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.