April 19, 2024

தலிபான்களால் உலங்குவானூர்தியில் தொங்கவிடப்பட்ட மொழிபெயர்ப்பாளர்

ஆப்கானிஸ்தான் கந்தகார் நகரில் அமெரிக்க பிளாக் ஹாக் உலங்குவானூர்தியில் சடலம் ஒன்றைத் தொங்கவிட்டபடி தாலிபான்கள் பறந்த காணொளி இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.தாலிபான்களின் அதிகாரப்பூர்வ ஆங்கில ட்விட்டர் பக்கமான தலிப் டைம்ஸில் இந்தக் காணொளி வெளியிடப்பட்டது. அதில் „நமது விமானப் படை. இந்த நாளில் இஸ்லாமிக் எமிரேட்ஸின் விமானப்படை உலங்குவானூர்தியில் கந்தகார் நகரை ரோந்து செய்தபோது.“ எனப் பதிவிட்டுள்ளது. ஆப்கனாஸ்தானுக்கு தாலிபான்கள் இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான் எனப் பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரில் வெளியாகியுள்ள இக்காணொளி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவுக்கு உதவிய மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரைத் தாலிபான்கள் கொன்று, அவரது சடலத்தை இப்படி உலங்குவானூர்தியில் தொங்கவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், அது கொல்லப்பட்ட ஒருவரின் சடலமா அல்லது வெறும் பொம்மையா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை. அதேநேரம் தாலிபான்களின் இந்த செயலை பலரும் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.