März 28, 2024

இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை மறுப்பு – மத்திய அரசுக்கு ராமதாஸ் கடும் கண்டனம்

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற வரையறை இந்தியாவிலுள்ள ஈழ அகதிகளுக்கு பொருந்தாது என சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய அரசின் இந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாத மனிதநேயமற்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்களப் படைகளுக்கும் கடந்த 1980-களின் தொடக்கத்திலிருந்து 2009-ம் ஆண்டு வரை உக்கிரமாகப் போர் நடைபெற்றது. அந்தக் காலகட்டத்தில் சிங்களப் படையினர் நடத்திய இனப்படுகொலைகளில் உயிர் பிழைப்பதற்காகவும், சிங்களப் படையினரின் பாலியல் அத்துமீறல்கள், உடல்ரீதியிலான கொடுமைகள் ஆகியவற்றிலிருந்து தப்பிப்பதற்காகவும் அவர்கள் இந்தியாவுக்குள் வந்ததாக அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அவர்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையவில்லை எனக் கூறியுள்ளார்.

தஞசம் புகுந்தவர்களுக்காக 1951 ஆம் ஆண்டில் ஐநா அகதிகள் உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. அதில், இந்தியா இன்னும் கையெழுத்திடவில்லை என்பதாலும், இந்தியாவில் அகதிகள் குறித்த தேசியக் கொள்கை இல்லாததாலும்தான் இந்தியாவுக்குள் தஞ்சம் புகும் அகதிகள் அனைவரும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று அழைக்கப்படுவதாகவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதம், இனம் ஆகியவற்றின் பெயரால் கொடுமைகளுக்கு ஆளாகி, இந்தியாவுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன் வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்போது, இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்படுவது சரியல்ல என பாமக நிறுவனர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதுதான் சரியானது ஆகும் எனவும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.