März 28, 2024

மழையால் மிதக்கும் சீனா!! 12 பேர் பலி!!

சீனாவில் மழையால் உண்டாகும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. அங்கு பெய்து வரும் கனமழையால், மத்திய சீன நகரமான

ஜெங்ஜோவில் ஒரு சுரங்கப்பாதையில் ஏற்பட்ட வெள்ளப்போக்கு காரணமாக 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். ஒரு தொடருந்துக்குள் மார்பளவு தண்ணீரில் சிக்கி பயணிகள் போராடுவதைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுள்ளன.

சீனாவில் (China) பல முந்தைய பதிவுகளை முறியடிக்கும் வகையில் கனமழை பெய்து வருகிறது. சீன சாலைகளும் சுரங்கப்பாதைகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஹெனன் மாகாணத்தில் மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவ, மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

“பெரு மழை காரணமாக ஜெங்ஜோவோ மெட்ரோவின் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால், அங்கு மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். நீரில் மக்கள் சிக்கிக்கொள்ள நிலைமை மோசமானது. இங்கு சிக்கியவர்களில் 12 பேர் இறந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்டனர்” என்று வீபோ போஸ்டில் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் (Social Media) பீதியைக் கிளப்பும் பல படங்கள் பகிரப்பட்டன. ஒரு ரயில் வண்டிக்கு உள்ளே வேகமாக அதிகரித்து வரும் நீரின் அளவுக்கு மத்தியில் பயணிகள் சிக்கி இருப்பதைக் காண முடிந்தது. மக்களை பாதுகாப்பாக வெளியே அழைத்து வர, மீட்புப் படையினர் ரயில் வண்டியின் கூரையை உடைக்க வேண்டி இருந்தது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.