April 24, 2024

அமேசான் நிறுவன முன்னாள் தலைவர் ஜெப் பெசோஸ் விண்வெளிப் பயண முயற்சி வெற்றிகரமாக நிறைவு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண ஏவுதளத்தில் இருந்து New Shepherd விண்கலம் மூலம் ஜெப் பெசோஸ் (Jeff Bezos) விண்வெளிக்கு சென்றார். உலகப் பணக்காரர்களுள் ஒருவரான ஜெப் பெசோஸ் (Jeff Bezos) குறைந்த கட்டணத்தில் விண்வெளி சுற்றுலாவை சாத்தியப்படுத்துவதற்காக புளூ ஆர்ஜின் (Blue Origin) நிறுவனத்தை தொடங்கினார். கடந்த 9 நாட்களுக்கு முன், பிரிட்டன் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன் விண்ணில் 86 கிலோமீட்டர் பயணித்து சாதனை படைத்தார்.

அதனை முறியடிக்கும் விதமாக ஜெப் பெசோஸ் (Jeff Bezos) தனது சகோதரர் மார்க் பெசோஸ், 82 வயது முன்னாள் பெண் விமானி மற்றும் 18 வயது சிறுவன் ஒருவனுடன் 106 கிலோமீட்டர் விண் பயணத்துக்குத் தயாரானார். மணிக்கு 3,595 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்த ராக்கெட், விமானிகள் தயவின்றி தானியங்கி முறையில் இயங்கும் 60 அடி நீள New Shepherd விண்கலத்தை 105 கிலோமீட்டர் உயரத்தில் விண்ணில் செலுத்திவிட்டு பூமிக்குத் திரும்பியது.

அங்கிருந்து மேலும் ஒரு கிலோமீட்டர் உயரம் பயணித்த விண்கலம் பின்னர் ராட்சத பாராசூட்டின் உதவியுடன் பூமியில் தரை இறங்கியது.

10 நிமிடங்கள் 10 வினாடிகள் நீடித்த விண்பயனத்தை நிறைவு செய்து விட்டு பூமிக்குத் திரும்பிய ஜெப் பெசோஸை (Jeff Bezos) அவரது உறவினர்களும், ஊழியர்களும் உற்சாகமாக வரவேற்றனர்.

விண்கலத்தை ஏவி விட்டு வெடித்து சிதறாமல் ராக்கெட் மீண்டும் பூமிக்குத் திரும்பி விடுவதால் பெரும் பணச் செலவு தவிர்க்கப்படுவதுடன் வரும் காலங்களில் குறைந்த கட்டணத்தில் விண் பயணம் சாத்தியமாகியுள்ளது.