April 20, 2024

இலங்கைப் பொலிஸார் அரசியலமைப்பையும், மனித உரிமைகளையும் மீறி நடந்து கொண்டுள்ளனர்

இலங்கையில் கடமையாற்றும் பொலிஸார் அரசியலமைப்பையும், மனித உரிமைகளையும் மீறி நடந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு உயர் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு எந்தவகையான நிர்வாகத் திறனும் இல்லை. அவ்வாறாக, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜோசப் ஸ்டாலின், பிக்குகள் மற்றும் பெண்களை எவ்வாறு என்டிஜன் அல்லது பீசீஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தாது, தனிமைப்படுத்தலுக்கு அனுப்ப பொலிஸார் தீர்மானிக்க முடியும். என இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,

தனிமைப்படுத்தல் தீர்மானம் தொடர்பான ஒழுங்குவிதிகளுக்கமைய அமைச்சருக்கு சந்தர்ப்பத்திற்கு சந்தர்ப்பம் வர்த்தமானியை வெளியிடமுடியும்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவத்தின் போது ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டபோது அதில் ஈடுபட்டிருந்தவர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பின்னர் சுகாதார பரிசோதனைகள் எதனையும் மேற்கொள்ளாது அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் தொடர்பான சரத்துக்கள் அனைத்தையும் மீறியும் மற்றும் முன்வைக்கப்பட்டுள்ள சகல ஒழுங்குவிதிகளை மீறியும், தனிமைப்படுத்தல் தொடர்பான சட்டத்தின் சரத்துகளை மீறியும், ஒக்டோபர் 15 ஆம் திகதி மற்றும் மார்ச் மாதத்தில் முன்வைக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை மீறியும் சுகாதார பணிப்பாளரினால் செயற்படுத்த வேண்டிய விடயங்களை பொலிஸார் கையில் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் பிணை வழங்கப்பட்டவர்களை என்டிஜன் அல்லது பீசீஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தாது, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜோசப் ஸ்டாலின், பிக்குகள் மற்றும் பெண்களை தனிமைப்படுத்தலுக்கு அனுப்ப எவ்வாறு பொலிஸாரால் தீர்மானிக்க முடியும். ” என்று கேள்வி எழுப்பியுள்ளார் சஜித் பிரேமதாச.