April 19, 2024

ஊடக கொலைகள் இனி இலங்கையில் சாதாரணம்!

 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாது தற்போதைய அரசு திண்டாடிவருகின்றது.இந்நிலையில் மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளதை பொறுக்க முடியாத அரசு போராட்டங்களை முடக்க முற்பட்டுள்ளது.இதனை வெளிப்படுத்த முற்படும்; ஊடகங்களையும் முடக்க முற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமச்சந்திரன்.

இலங்கையின் முன்னணி ஊடகமான சிரச ஊடக வலையமைப்பின் ஒளிப்பரப்பு அனுமதிப்பத்திரத்தை சட்ட நடவடிக்கையின் ஊடாக பறிப்பதற்கான முயற்சிகள் தொடர்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.அது தொடர்பிலேயே சுரேஸ் பிறேமச்சந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் கோத்தபாய ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போதே வெள்ளைவான்கள் வெளியே வந்திருந்ததாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் வடகிழக்கில் அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில் 39 வரையான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் கொல்லப்பட்டோ காணாமலோ ஆக்கப்பட்டிருந்தனர்.

இன்று வரை கொல்லப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் நீதியோ ஏன் விசாரணைகளோ முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் தற்போதும் அதே  வெள்ளைவான்கள் வருவதோ அல்லது ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்படுவதோ அல்லது கொல்லப்படுவதோ நடந்தேறுவது அதிசயமாக இருக்கப்போவதில்லையெனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.