März 28, 2024

சீன உள்விவகாரங்களில் ஐரோப்பிய யூனியன் தலைடுவதை சீனா விரும்பவில்லை என அறிவிக்கப்பட்டது

சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்துக்கு விஜயம் செய்து உய்கர் முஸ்லிம்களுக்கான மனித உரிமை செயற்பாடுகளை ஆராய விரும்பும் ஐரோப்பிய யூனியனின் கோரிக்கைக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

ஐ.யூ.வின் இச் செயல்முறையை சீனா முற்றாக நிராகரிப்பதாகவும் ஸின்ஜியாங் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்துகிறோம் என்ற பெயரில் சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடும் செயலாகவே நாம் இதைக் கருதுகிறோம் என்றும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது

உய்கர் முஸ்லிம்களும் மற்றும் சிறுபான்மையினரும் வசிக்கும் மாநிலமான ஸின்ஜியாங்குக்கு விஜயம் செய்யுமாறு சீனா ஐரோப்பிய யூனியனுக்கு பல தடவைகள் அழைப்பு விடுத்துள்ள போதிலும் ஏற்றுக்கொள்ள முடியாத முன்நிபந்தனைகளினால் அவ்விஜயங்கள் சாத்தியமாகவில்லை என்று தெரிவித்திருக்கும் ஐரோப்பிய யூனியனுக்கான சீனத் தூதரம், இத்தகைய முன் நிபந்தனைகளை எந்தவொரு இறைமை படைத்த நாடும் ஏற்காது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனின் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக் கொள்கை முகவர் நிலையம், ஐரோப்பிய யூனியன் ஸின்ஜியாங் மனித உரிமைகள் விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அம் மாகாணத்தில் இயங்கும் ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்களுக்கு பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களில் பலவந்தமாக தொழில்செய்ய நிர்ப்பந்தம் செய்யப்படுகிறதா என்பதை கண்டிப்பாக அவதானிக்கும் ஒரு பொறிமுறையை ஐரோப்பிய யூனியன் அறிமுகம் செய்யவுள்ளது என்றும் தெரிவித்த சில மணித்தியாலங்களில் ஐ.யூ.வுக்கான சீனத் தூதரகம் இந்த அறிக்கையை வெளியிட்டது.

மேலும் உய்கர் பொருளாதாரத்துறைப் பேராசிரியர் இல்ஹாம் தோதி, பிரிவினை தொடர்பான குற்றச்சாட்டில் 2014ம் ஆண்டு கைதாகி சிறையில் தள்ளப்பட்டது தொடர்பாக ஆராயும்படியும் உய்கர் முஸ்லிம்களின் செயற்பாட்டாளர்கள் எவ்வாறு கவனிக்கப்படுகிறார்கள் என்பதை ஆராயும் படியும் ஐ.யூ.வின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கான தலைவர் ஜோசப் பொரல் கேட்கப்பட்டிருந்தார்.