April 20, 2024

இவ்வருடம் களை கட்டாமற் போன கனடாவின் பிறந்த நாள் ‘கனடா தினம்’

(ரொறென்ரோவிலிருந்து ஆர் என். லோகேந்திரலிங்கம்)

கனடாவின் பிறந்த தினமான நேற்று யூலை முதலாம் திகதி வழையாக தேசிய அளவிலும், மாகாண அளவிலும் மாநகராட்சி மன்றங்களின் அளவிலும் விமர்சையாகக் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்.

இவற்றை விட கனடாவில் வாழும் பல்லின மக்கள் சார்ந்த மக்கள் சார்ந்த அமைப்புக்களும் கனடா தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதி உதவிகளை வழங்கும் வழக்கம் வருடாந்த பேணப்படும் ஒன்றாகும்.

மத்திய அரசாங்கம் சார்பில் வருடாந்தம் கொண்டாடப்பெறும் ‘கனடா தின’ விழாக்களில் பிரதம மந்திரி, மாகாண முதல்வர்கள் மற்றும் மத்திய மற்றும் மாகாண அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் மகிழ்ச்சியோ கலந்து கொண்டு சிறப்பிக்கும் ஒரு அரச வைபவமாகவே கொண்டாடப்படுவதுண்டு.

ஆனால், இந்த வருடத்தின் கனடா தினத்தை கொண்டாடி மகிழ்வதில் இங்குள்ள மூன்று வகையான அரசாங்கங்களுக்கோ அன்றி பல்லின மக்கள் சார்ந்த அமைப்புகளுக்கோ பெரும் ஆர்வத்தை தூண்டாமல் தலை குனிந்த நிலையில் குற்ற உணர்வுகளை மனதிற் தாங்கிய வண்ணம் கனடா தினத்தை எதிர்கொண்டது போன்ற காட்சிகளே நேற்று அதிகமாக இருந்தது.

நாடு முழுவதும் ஒரே மன நிலையோடு அரசியல் தலைவர்களும் பொது மக்களும், அமைப்புக்களும் இன்றைய நாளை கழித்தது போன்ற அனுபவத்தையே எமக்குத் தந்தது
ஆனால் இவ்வருடம் கனடா தினத்தன்று டொராண்டோவின் தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் தோடம்பழ நிற உடைகள் மற்றும் கருப்பு நிறம் கொண்ட உடைகள் ஆகியவற்றை அணிந்துகொண்டு ‘ஒவ்வொரு குழந்தையும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றே” என்ற தலைப்பில் இடம்பெற்ற நடைப்பயணத்திலும் பங்கேற்றார்கள். இந்த அணிவகுப்பின் போது அனைவரும் ‘ஒவ்வொரு குழந்தையும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றே” என்பதை கோசங்களாக உரத்து சொல்லிய வண்ணம் நடந்தார்கள்

கனடா தின கொண்டாட்டங்களுக்குப் பதிலாக 1ம் திகதி வியாழக்கிழமை, பல நகரங்களில் கனடா தின துக்கம் அனுஸ்டிக்கும் நிகழ்வுகளும் ஊர்வலங்களும் இடம் பெற்றுள்ளதை நாம் உணரக் கூடியதாக இருந்தது.

இதற்குக் காரணம் கனடிய மக்களில் அதிகமானவர்களுக்கு தெரிந்த ஒரு துன்பகரமான விடயமே என்பதை நாம் இங்கு பதிவு செய்கின்றபோது, எம் விரல்களில் சிறிதளவில் நடுக்கம் ஏற்படுவதை உணர்கின்றோம்.

அண்மைக்காலத்தில் கனடிய பாராளுமன்றத்திலும் மாகாணப் பாராளுமன்றங்களிலும் ஒரு முதன்மையான விடயமாக பேசப்படடும் அனுதாபதங்களைப் பகிர்ந்த வண்ணமும் உள்ளது விடயம், கனடாவின் பழங்குடி மக்கள் சார்ந்த குடும்பங்களைச் சேர்ந்த சிறு குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள் ஆகியோருக்கு நேர்ந்த அவலம் நிறைந்த சம்பவங்களே ஆகும்.
இன்றிலிருந்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, கனடாவின் அரசாங்கங்களாலும் அப்போது பதவியிலிருந்த ஆளுனர் நாயகங்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘அங்கீகாரம் பெற்ற ஒரு அரசின் நடைமுறைகளில் ஒன்று’ என்ற வகையில் பழங்குடி மக்கள் சார்ந்த குடும்பங்களைச் சேர்ந்த சிறு குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள் ஆகியோரை அவர்களின் குடும்பங்களிலிருந்து பிரித்து அவர்களை கிறிஸ்தவப் பாதிரிகளினால் நிர்வகிக்கப்பட்டு வந்த ‘வதிவிடப் பாடசாலைகளில்’ தங்க வைத்து கல்வி போதிப்பது போன்ற திட்டம் தொடரப்பட்டு வந்துள்ளது. எமக்கு கிடைத்த தகவல்களின் படி 1996ம் ஆண்டு வரையும் கனடாவின் அரசாங்கங்களுக்கும் ஆசிஎம்பி என்னும் கனடாவின் மத்திய அரசு சார்ந்த தேசிய காவல் துறைக்கம் நன்கு அறியப்பட்ட முறையிலேயே இந்த திட்டம் தொடரப்பட்டு வந்ததாகவும், அதன் காரணமாக பிள்ளைகள் சார்ந்த குடும்பங்கள் தங்கள் பிள்ளைச் செல்வங்களை பிரிந்த பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியாதவர்களாகவும் இருந்துள்ளார்கள் என்பதும் இங்கு முக்கியமான ஒரு விடயமாகும்.

ஆனால் மிக அண்மையில் கனாடவின் பழங்குடியினர் சார்ந்த அமைப்புக்கள் பல ஒன்று சேர்ந்து நடத்திய தேடுதல்களின் விளைவாக இவ்வாறு தங்கள் இனம் சார்ந்த குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டிருந்த குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள் ஆகியோர் பலாத்காரமாக கொலை செய்யப்பட்டு வதிவிடப் பாடசாலைகளுக்கு அருகில் உள்ள இடங்களிலும் அந்த பாடசாலைகளுக்கு தொடர்புடைய தேவாலயங்களின் வளாகங்களிலும் புதைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்தனர். அங்கு அவர்கள் கண்டது, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் இன குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள் ஆகியோரின் உடல் எச்சங்கள் மற்றும் எலும்புக் கூடுகளும் ஆகும்.

இவ்வாறு அந்த வதிவிடப் பாடசாலைகளின் நிர்வாகத்தில் தொடர்புடைய கிறிஸ்த்தவப் பாதிரிகள் கொலை செய்யும் அளவிற்கு சென்றதற்கு, கனடிய அரசின் அங்கீகாரமும் அறிதலும் ஓரளவிற்கு இருந்தது என்றே சொல்லப்படுகின்றது.

கனடாவின் பழங்குடியினர் என்ற இனத்தின் கலை கலாச்சாரப் பண்பாட்டுக் கோலங்களை அழித்து கடனாவில் பழங்குடியினர் என்ற இனக் குழுமத்தை முற்றாக அழிக்கும் ஒரு நோக்கமும் இந்த பாதகமான செயல்களுக்குப் பின்னால் இருந்தது என்றும் கூறப்படுகின்றது.

இவ்வாறு தங்கள் இனக் குழுமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளம் வயதினரை கனடாவின் பல மாகாணங்களில் அரசாங்கத்தினதும் மத்திய காவல்துறையினரின் ஆதரவோடும் அவர்கள் குடும்பங்களிலிருந்து பிரித்து, அவர்களை துன்புறுத்தியும் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கியும் கொலை செய்தும் அரங்கேற்றிய கொடுமைகளுக்காகவே, இவ்வருடம், கனடாவின் பழங்குடியினர் மாத்திரமல்ல, அரசியல் தலைவர்களும் சமூக அமைப்புக்களும் ‘கனடா தினத்தை’ கொண்டாட முன்வரவில்லை