ஆட்டிப் படைத்த கொடூர கிழவன்.. 13 கொலை, 50 பலாத்காரம், 120 கொள்ளை; 40 ஆண்டுக்கு பின் கைது!

கலிபோர்னியாவில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளியான முன்னாள் போலீஸ் அதிகாரி, 40 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் ஜோசப் ஜேம்ஸ் டி ஏஞ்சலோ (74). கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்க காவல்துறையினரால் தேடப்பட்ட கடுங்குற்றவாளி.

கலிபோர்னியாவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர். நியூயார்க்கைப் பூர்வீகமாகக் கொண்ட ஜோசப், அமெரிக்க கடற்படையில் சேர்ந்து வியட்நாம் போரில் ஈடுபட்டார். போலீஸ் பணியில் இருந்து கொண்டே கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்களை அரங்கேற்றி வந்தார். குற்றவாளியை போலீசார் கண்டறியமுடியாமல் திணறி வந்தனர்.

தனியாக வீட்டில் இருக்கும் பெண்கள், குடும்பத்தினரை தாக்கி குற்றச் செயல்படுவதே இவரது இலக்காக இருந்தது.

குற்றங்களை அரங்கேற்றம் செய்ய போகும் வீடுகளில் ஆண்கள் இருந்தால், அவர்களை அடித்து சமையலறையில் கட்டிப் போட்டுவிடுவார்.

அங்கு பாத்திரங்கள் விழும் சத்தத்தைக் கேட்டால் போதும், சம்பந்தப்பட்ட குடும்ப ஆணை சுட்டுக் கொன்றுவிடுவார். பெரும்பாலும் இரவு நேரத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட செல்லும் போது, முகமூடி அணிந்து ஜன்னல் வழியாக நுழைந்து செல்வதே இவரது பழக்கமாக இருந்தது.

ஒரு முறை ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையடிக்க சென்றபோது சிக்கிக் கொண்டார். அதனுடன், ஜோசப்பின் போலீஸ் வேலை போய்விட்டது.

அதன்பின்னர் மோட்டார் வாகன மெக்கானிக்காக பணியாற்றிய ஜோசப், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். இருந்தும் கலிபோர்னியா காவல்துறையகால் அவரை கண்டுபிடிக்கவில்லை.

பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு, 2018ம் ஆண்டில் குற்றம் நடந்த இடத்திலிருந்து பெறப்பட்ட டி.என்.ஏ மாதிரிகளின் அடிப்படையில் ஜோசப் சிக்கினார். ஆன்லைன் மரபணு கண்டறியும் இணைய வலைத்தளங்களில் ஒன்றின் உதவியுடன், அவரை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

இதுகுறித்து கலிபோர்னியா போலீசார் கூறுகையில், ‘கொடுமைகளின் மறுபெயர் ஜோசப் ஜேம்ஸ் டி ஏஞ்சலோ. காவல்துறையினரும்,  பாதிக்கப்பட்டவர்களும் அவனின் முகத்தை அடையாளம் கண்டுபிடிப்பதில் மிகவும் தாமதமானது.

தீவிர விசாரணைக்கு பின்னர், குற்றஞ்சட்டப்பட்ட ஜோசப் 13 கொலைகள், 50 பலாத்காரம், 120 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த இந்த கொடூரமான குற்றவாளி இறுதியாக நீதிமன்ற விசாரணையின் போது, நீதிபதியிடம் தான் செய்த குற்றங்களுக்காக மன்னிப்பு கேட்டார். நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என்றனர்.