September 9, 2024

பௌத்தத்திற்கு முன்னுரிமை:கோத்தா?

நாட்டின் உயர் அரசியலமைப்புக்கு உட்பட்டு நாட்டின் ஒருமித்த

தன்மையினையும், பௌத்த மதத்தையும் பாதுகாப்பேன் என மக்களுக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்றுவேன். என 9வது நாடாளுமன்றத்தின் 1வது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கூறியிருக்கின்றார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், 19ஆவது திருத்தம் நீக்கப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்- ஜனாதிபதி.பல்வேறு அரசியல் முரண்பாடுகள் காரணமாக 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதாக பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

என, நிலையான அரசாங்கத்தை அமைக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்களிடம் கேட்டிருந்தோம். அதனை பெற்றுக்கொடுத்த தேசாபிமானமிக்க மக்களுக்கு நன்றி. வாக்களித்த அனைத்து வாக்களர்களுக்கும் நன்றிகள். 68 இலட்சத்துக்கும் அதிக மக்கள் என்மீதான நம்பிக்கையில்

ஜனாதிபதி தேர்தலில் எனக்கு வாக்களித்தனர். அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை இதுவரை நான் நிறைவேற்றி வந்திருக்கின்றேன். நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது சவாலான காலமாக இருந்தது. கொரோனா தொற்றுக்கு நாங்கள் முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது.

ஏனைய பலம் வாய்ந்த நாடுகளை விட எம்மால் கொரோன வைரஸ் தொற்றினை சிறப்பாக வெற்றிக்கொள்ள முடிந்தது. அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மக்கள் மதிப்பளிக்கின்றனர். எமது நாட்டில் அதியுயர் அரசியலமைப்புக்கு உட்பட்டு நாட்டின் ஒருமித்த தன்மை மற்றும் பௌத்த மதத்தை பாதுகாப்பேன்

என்று நான் வாக்குறுதி அளித்துள்ளேன். ஏப்ரல் தாக்குதல் காரணமாக நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது நாட்டு மக்கள் மத்தியில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் சந்தேகமான நிலை காணப்பட்டது. எந்தவொரு குடிமகனுக்கும் தானும் தனது குடும்பத்தினலும்

அச்சமின்றி வாழும் நிலையை மீண்டும் இப்போது ஏற்படுத்தியுள்ளோம். பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருளை ஓழிக்க நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கை குறித்த மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளமை தெரிகின்றது.அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிக்கையில்

பழைய முறையினை மாற்றி தகுதியானவர்களை நியமித்தோம். உற்பத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம். உரமானியம் வழங்கினோம். தரிசு நிலங்களை விவசாயத்துக்கு பயன்படுத்த ஊக்குவித்தோம்.

உள்நாட்டு வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம். இவை அனைத்தும் மக்கள் எம்மீது வைத்திருந்த நம்பிக்கையே காரணம். அந்த நம்பிக்கையை தொடரந்து உறுதிப்படுத்தும் வகையில் நாங்கள் செயற்படுவோம்.

மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை மக்களுக்கு சேவையாற்றுவதே என்பமை நினைவில் கொள்ள வேண்டும். சுதந்திரத்துக்கு பின்னர் இவ்வளவு காலமாகியும் மக்களின் பொதுப்பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.

காணி உரிமை இன்றி வசிக்கும் மக்களுக்கு காணியுரிமை வழங்க நடவடிக்கை எடுப்போம்.நீண்ட காலமாக பரம்பரை பரம்பரையாக வசிக்கும் மக்களை அங்கிருந்த அகற்ற நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது. யானை – மனித மோதல்களுக்கு நிலையான தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்வித்துறைக்கு முன்னுரிமை வழங்கப்படும். கிராமிய வைத்தியசாலைகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படும். சுதந்திர சுகாதார சேவையை மக்களுக்கு வழங்க இடையூறாக உள்ள விடயங்கள் நீக்கப்படும்.

தொழில்வாய்பின்மை இன்றைய இளம் தலைமுறையினர் எதிர்நோக்கியுள்ள பிரச்சினையாகும். இதற்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது 60ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில்வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தொழில்களை வழங்கும்போது வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களுக்கும் சம அளவிலான முன்னுரிமை வழங்கப்படும்.தொழில்களை வழங்குவதன்றி புதிய தொழில்களை பெற்றுக்கொடுப்பதே எமது கடமையும், பொறுப்பும் ஆகும்.

தேயிலை உற்பத்தி அபிவிருத்தி செய்யப்படும். சிறிய மற்றும் நடுத்தர தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு உதவிகள் வழங்கப்படும். மூடப்பட்டுள்ள தேயிலை தொழிற்சாலைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும். முள்ளுதேங்காய் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்படும்.

தெங்கு, தென்னை உற்பத்திகள் அபிவிருத்தி செய்யப்படும். நகர மற்றும் கிராம அபிவிருத்தி மற்றும் மக்களின் வீட்டு பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க ராஜாங்க அமைச்சு பதவிகள்உருவாக்கப்பட்டு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கல்வியின் பெறுமதியை உணர்ந்தே கல்விக்கு நான்கு இராஜாங்க அமைச்சுகள் உருவாக்கப்பட்டுள்ளன.  மின்சார உற்பத்தியை அதிகரிக்க தனியாக இராஜாங்க அமைச்சு பதவி உருவாக்கப்பட்டுள்ளது. எமது பாரம்பரிய தைத்தொழில்களை அபிவிருத்திசெய்ய

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கு உரிய பொறுப்புகள் மற்றும் கடமைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிக்க யோசனை செய்துள்ளோம்.

அரச சேவையில் தாம் எதிர்பார்க்கும் சேவையை பெற்றுக்கொள்ள முடியவில்லை என, மக்கள் குறை கூறுகின்றனர். எனவே அதனை நீக்க தேவையான அரச ஊழியர்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

மக்களுக்கு விரைவாகவும், திருப்தியான சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்கும் வழிமுறையொன்றை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அடையாளப்படுத்த வேண்டும். இலஞ்சம் மற்றும் ஊழல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எந்தவொரு பாரபட்சமும் பார்க்காது

நடவடிக்கை எடுக்க நான் பின்நிற்கபோவதில்லை. கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் மக்களின் வாக்குகளை பெற்ற பின்னர் மக்களின் அருகில் செல்வதில்லை. மக்கள் இதனை என்னிடம் பலமுறை கூறியுள்ளனர். அந்த நிலையை நீக்க வேண்டும்.

பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமான 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மக்களுக்கு வாக்குறுதி அளித்ததை போல அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின்னர் நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பினை உருவாக்குவோம்.

நாடாளுமன்றம் மற்றும் மக்களின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.