Oktober 15, 2024

2. 08. 20 சுவிசின் புதிய அறிவிப்பு 01. ஒக்டோபர் 2020 முதல் 1000ற்கு மேலாக ஒன்று கூடுவதற்கு தடை நீக்கம்

சுவிற்சர்லாந்தின் 12.08.2020 புள்ளிவிபரத்தின் அடிப்படையில் மகுடநுண்ணியிரித் (கொறோனா) 274 நபர்களுக்கு புதிதாகத் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முதல் நாள் 11. 08. 2020 பதிவின்படி 152 நபர்கள் தொற்றிற்கு ஆளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சுவிஸ் அரசு முடக்கத்தினை அறிவித்திருந்த காலத்துடன் ஒப்பிட்டால் 20. 04. 2020 அன்று 277 மக்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இருந்தபோதும் 1000 மக்களுக்குமேல் ஒன்றுகூடுவதற்கு செப்ரெம்பர் 2020 வரை அறிவிக்கப்பட்டிருக்கும் தடையினை ஒக்டோபர் 2020 முதல் நீக்குவதாக சுவிற்சர்லாந்தின் நடுவனரசு அறிவித்துள்ளது. இதன்போது பொருளாதார, கல்வி மற்றும் விஞ்ஞான ஆய்வமைச்சர் திரு. குய் பார்மெலின், சுவிஸ் அதிபர் திருமதி சிமோனெற்ரா சொமறுக்கா மற்றும் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே ஆகியோர், சுவிஸ் அரசின் பேச்சாளர் திரு. அந்திறே சிமோனாச்சி ஆகியோர் இன்றைய ஊடக சந்திப்பில் பங்கெடுத்திருந்தனர்.

1000 மக்களுக்கு மேலாக ஒன்றுகூடுவதற்கு அறிவிக்கப்பட்டிருக்கும் தடை செப்ரெம்பர் 2020 வரை நீடிக்கப்படுவதாக சுவிஸ் அதிபர் திருமதி. சொமறூக்கா தெரிவித்தார். 01. 10. 2020 முதல் 1000 மக்களுக்கு மேலாகப் பங்கெடுக்கும் பெரு விளையாட்டு நிகழ்வுகள், பண்பாட்டு நிகழ்வுகள், சமயப்பெருவிழாக்கள் உரிய காப்பமைவுடன் அனுமதிக்கபடும் எனும் தளர்வினையும் சுவிஸ் அதிபர் அறிவித்தார்.

கடந்த முறை 8ம் மாதம் வரை 1000இற்குள் கூடுவதற்கு ஒப்புதல் அளித்திருந்த வேளை 1000 மக்களுக்கு மேலாக கூடுவதற்கு தடைநீக்குவது தொடர்பில் செப்ரெம்பரில் மீளாய்வு செய்யப்படும் என அறிவித்திருந்தனர். இப்போது இத்தடை ஒருமாதம் மட்டும் நீடிக்கப்படுகின்றது. கடந்த 24 மணிநேரத்தி;ல் 274 புதிய தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள வேளையில் ஏன் 10ம் மாதம் முதல் பெருநிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது எனும் ஊடகவியலாளர் கேள்விக்கு சுகாதார அமைச்சர் திரு. அலான் பேர்சே கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்: «கடந்த மார்ச் 2020ல் தொற்றுத் தானம் பெருவெடிப்பாக கூடிக்கொண்டிருந்தது. இப்போது நோய்த் தொற்று ஆய்வு செய்யும் தொகையும் முன்னரை விட அதிகளவு, அத்துடன் தொற்றின் தொகை கூடியிருந்தாலும் பெருமாற்றத்துடன் பெருகவில்லை. அதேவேளை 01. 10. 2020 முதல்பொது வெளிகளில் அல்லது கட்டடங்களுக்குள் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கும்போது, நிகழ்வு ஏற்பாட்டாளர்களும் வருகை அளிப்போரும் கடுமையான சுகாதர மற்றும் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையினை ஒழுக வேண்டி இருக்கும்.»

போக்குவரத்து துறைக்கு 700 மில்லியன் பிராங்

கடந்த கொறோனா முடக்கக்காலத்தில் பொதுப்போக்குவரத்து துறையின் இழப்பினை ஈடு செய்வதற்கு சுவிஸ் அரசு 700 மில்லியன் ஒதுக்க பாராளுமன்றத்திடம் கோரிக்கையினை விடுத்துள்ளது. கொறோனா முடக்க காலத்தில் சுவிஸ் அரசு மக்களை வீடுகளில் இருக்க கேட்டிருந்தது, தொடருந்து, பேருந்து மற்றும் சரக்குப் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது, நிறுவனங்களது உற்பத்திகளும் குறைந்திருந்தது ஆகவே பொதுப்போக்குவரத்து பெருமளவு சரிவைத் சந்தித்திருந்தது. இதனை ஈடு செய்வது சுவிஸ் அரசின் நடவடிக்கையாக இன்று வெளிப்பட்டது.

பெருநிகழ்விற்கு மாநிலங்கள் அனுமதி அளிக்க வேண்டும்

பெரு நிகழ்வுகள் அனைத்திற்கும் மாநிலங்கள் தமது வரைமுறைக்கு ஏற்ப அனுமதி அளிக்கும். எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சுவிசின் 26 மாநிலங்களும் இணைந்து ஒத்திசைவான காப்பமைவு நடவடிக்கைகளை அறிவிப்பர். பெரு நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கும்போது அங்கு வருகை அளிப்பவர்களை தடமறியும் வழி ஒரு முக்கிய விடயமாகக் கொள்ளப்படும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

சுவிஸ் அதிபர் திருமதி சொமொறுக்கா தெரிவிக்கையில் மாநில அரசுகளின் பெரும்பாலான சுகாதாரத்துறை இயக்குனர்கள் இவ்வாண்டு இறுதி வரை பெருநிகழ்வுகளைத் தவிர்க்க விரும்பியபோதும் 1000 மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடுவதற்கு அளிக்கப்பட்டிருக்கும் தடையினை உடன் நீக்க வேண்டி பல விளையாட்டு மன்றங்களும் பண்பாட்டு அமைப்புக்களும் சுவிஸ் அரசை தொடர்ந்து கேட்டு வந்துள்ளன. அதற்கமைய இத்தடை 10ம் மாதம் முதல் நீக்க முடிவெடுக்கப்படுகின்றது என்றார்.

விமானங்களில் முகவுறை

ஆகஸ்ட் 2020 நடுப்பகுதி முதல் உள்ளூர் விமானம் முதல் சுவிசில் தரையிறங்கும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களிலும் முகவுறை அணிதல் கட்டாயமாக்கப்படுகின்றது. கடந்த 06. 07. 2020 முதல்பொதுப்போக்குவரத்தில் கட்டாய முகவுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசதந்திரிகளுக்கும் தூதுவர்களுக்கும் தனிமைப்படுத்துவதில் விலக்கு

சுவிஸ் நாட்டு அரசதந்திரிகள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் நோய்த்தொற்று அதிகமுள்ள நாடுகளுக்கு தம் பணிகாரணமாக பயணித்திருப்பின் அவர்கள் நோய்த்தடுப்பு நடிவக்கை காரணமாக தம்மை தனிமைப்படுத்தி ஒதுக்கியிருக்கத் தேவையில்லை எனவும் சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.

நோய்தடுப்பு பரப்புரைக்கும் செயலிக்கும் 31.6 மில்லியன் பிராங்

சுவிஸ் அரசு நோய்த்தடுப்பு பரப்புரை மற்றும் செயலிக்காக மேலதிகமாக 31.6 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை 2020 ஆண்டிற்கு ஒதுக்க பாராளுமன்றத்தினை வேண்டி உள்ளது. இதன்மீதான வாதம் இலையுதிர்கால பாராளுமன்ற ஒன்றுகூடலில் விவாதிக்கப்படவுள்ளது.

றைசியாவின் புதிய ஆயுதம் ஸ்புற்னிக்

இது இப்படியிருக்க றைசியா கொறோனா தடுப்பூசியினை உலகில் முதலாவதாக தாம் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்திருக்கின்றது.

பெருநோய்த் தொற்று அச்சத்தில் இருக்கும் உலகு இதனை வரவேற்று கைதட்டாமல் ஐயத்துடன் நோக்குகின்றது. முன்னர் நிலவில் யார் தரையிறங்குவார்கள் என்ற கேள்வி பனிப்போர் காலத்தில் எழுந்ததுபோல் தடுப்பூசியும் ஒருவகைப் பலப்பரீட்சையாக நோக்கப்படுகின்றது.

றைசியா கண்டுபிடித்திருக்கும் தடுப்பூசியின் வீரியம், பாதுகாப்புத்தன்மை, பக்கவிளைவு என்பன முறையான சோதனைகளின்றி அறியமுடியாது என உலகின் பல விஞ்ஞானிகளும் தமது ஐயத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

பனிப்போர் காலத்தில் 04. 10. 1957ம் ஆண்டு பூமியில் இருந்து றைசியா விண்வெளிக்கு ஏவிய உலகின் முதலாவது செய்மதி ஸ்புற்னிக் ஆகும்.

இன்றைய நுண்ணியிர் உயிரியல் கொறோனாவை வெல்வதற்கு றைசியா ஸ்புற்னிக் பெயரில் «வி» எழுத்தைச் சேர்த்துக்கொண்டு „Sputnik V“ புதிய தடுப்பூசியினை அறிமுகப்படுத்தி உள்ளது. இன்றுவரை கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் செய்மதியை இதே பெயர்கொண்டு அழைக்கின்றார்கள். அதுபோல் உலகின் முதலாவது தடுப்பூசியின் பெயர் றைசியாவின் விளம்பர தூதராகவும் ஆக்கப்பட்டுள்ளது.

ஆனால் உலக சுகாதார அமைப்பும் இத் தடுப்பூசியின் வெற்றியினை சந்தேகத்துடன் நோக்குகின்றது.

இருப்பினும் றைசிய அதிபர் கடந்த 11. 08. 2020 முதல்இத் தடுப்பூசியினை மக்களுக்கு இடுவதற்கு அனுமதியினை வழங்கி உள்ளார். இதன்போது உலக வழமையில் உள்ள ஆய்வு முறமையின் 3வது கட்டத்தினை விலக்கி இத்தடுப்பூசி மக்களிடத்தில் நேடியாக இடப்படுகிறது. ஆகவே இதன் பக்கவிளைவுகளை இப்போது கணிக்கமுடியாது என்றும் அமெரிக்க தடுப்பூசி விஞ்ஞானி திரு. பேற்ரெர் கொற்ரேச் தெரிவித்துள்ளார்.

முழுமையற்ற அல்லது தவறான தடுப்பூசி உலகின் சிறந்த நல்ல தடுப்பூசியினைக் கண்டறியும் திறனை மழுங்கச் செய்வதுடன் அதிக பாதிப்புக்களை விளைவிக்கும் என திரு. பிரங்கோய்ஸ் பலூக்ஸ் இங்கிலாந்து விஞ்ஞானி எச்செரித்துள்ளார்.

தொகுப்பு: சிவமகிழி