September 6, 2024

நானே சிரேஷ்ட உறுப்பினர் எனக்கே தேசிய பட்டியல் பதவி உரித்தாக வேண்டும்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்ததாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் தாம் என்பதால், தனக்கே தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள இணையத்தளம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்தப்படியாக தொடர்ந்து நானே நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து வந்தேன். எனது பெயரையே தேசிய பட்டியலில் முதலிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எனக்கே அந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி உரித்தாக வேண்டும்.

தேசிய பட்டியலில் இடம் கிடைத்தது என்று நான் சும்மா இருக்கவில்லை. கடந்த காலத்தை போல் கம்பஹா மாவட்டம் முழுவதும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டேன். எனது பொறுப்பை நான் நிறைவேற்றி இருக்கின்றேன்.

இறுமாப்பு காரணமாகவே கட்சிக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. இதனால் தற்போதாவது நேர்மையாக கலந்துரையாட வேண்டும். இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, தவறுகளை திருத்திக்கொண்டு முன்நோக்கி செல்ல வேண்டும் எனவும் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.