September 16, 2024

முகக்கவசம் அணியாதவர்கள் வாக்களிக்க அனுமதி கிடையாது!

நாடாளுமன்ற தேர்தல் தினத்தன்று ஒவ்வொரு வாக்காளர்களும் வாக்களிக்கச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்பில் யாழ் மாவட்ட தேர்தல் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:-
1. வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும் போது மூக்கிலிருந்து நாடி வரையான பகுதியை மறைக்கும்படியான முறையில் முகக்கவசம் அணிந்து செல்லுதல் வேண்டும். முகக்கவசம் அணியாத எந்த வாக்காளர்களும் வாக்களிப்பு நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
2. வாக்களிப்பு நிலையத்திற்கு வந்தவுடன் வாக்களிப்பு நிலையத்தின் நுழைவாயிலில் கை கழுவுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் சவர்க்காரமிட்டு குறைந்தது 20 செக்கன்களுக்கு முறையாகக் கைகளைக் கழுவுதல் வேண்டும்.
3. வாக்களிப்பு நிலையத்திற்குள் உட்பிரவேசித்ததில் இருந்து குறைந்தது 1 மீற்றர் சமூக இடைவெளியை எப்பொழுதும் பேணிக் கொள்ளுதல் வேண்டும்.
4. வாக்களிப்பு நிலையத்திற்கு வருகை தரும்போது ஆள் அடையாள ஆவணம், வாக்காளர் அட்டை மற்றும் புள்ளடி இடுவதற்காக நீலம் அல்லது கறுப்பு நிறத்திலான பேனா என்பனவற்றை மட்டுமே கொண்டுவருதல் வேண்டும்.
5. கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமல், தொண்டைவலி, மற்றும் சுவாச இடர்பாடுகள் என்பன தென்படுபவர்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு மாலை 4.00 தொடக்கம் 5.00 மணி வரையான காலப்பகுதிக்குள் முகக்கவசத்துடன் வருகை தந்து வாக்களிப்பது சிறப்பானதாகும்.