September 11, 2024

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபதமெடுக்கட்டும்?

போதைப் பொருள் பாவனையால் வருடம் தோறும் இலங்கையில் 35 ஆயிரம் பேர் மரணத்தை தழுவுகின்றனர் .அதேவேளை நாள் ஒன்றுக்கு 90 கோடிக்கு மேல் செலவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மது சாரம் மற்றும் புகைத்தல் பாவனையால் வருடாந்தம் 35, ஆயிரம் பேர் மரணத்தை தழுவுகின்ற நிலையில் நாள் ஒன்றுக்கு சிகரெட் சாராயம் பியர் பாவனைக்காக சுமார் 90 கோடி ரூபாக்களை மக்கள் செலவு செய்கின்றனர் என மதுசாரம் மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான யான் ஸ்ரீலங்கா அமைப்பினால் அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது
யாழ் ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் விற்பனை செய்யப்படுகின்ற புகை பொருட்களில் 19 சதவீதமானவை ஒன்று அல்லது இரண்டு என்ற அளவிலேயே கொள்வனவு செய்யப்படுகின்ற நிலையில் புகைத்தல் பாவனையை கட்டுப்படுத்துவதில் பாரிய சவால்கள்  எழுந்துள்ளது.
புகைத்தல் பொருட்கள் மதுசாரம் மற்றும் ஏனைய போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு தற்போது  நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பங்களிப்பு ஆற்றுவது  அவர்களின் வேலைத் திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.
தனி சிகரெட் மற்றும் புகைப் பொருட்களின் விற்பனையை தடை செய்தல் ,வெற்றுப் பொதியிடல் முறைமை அங்கீகரிக்கப்படல் ,கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டருக்கு இடைப்பட்ட தூரத்தில் விற்பனையை தடை செய்தல், புகையிலை நிறுவனங்களிடமிருந்து முறையான வரி அறவீட்டு கொள்கைகள் வகுத்தல் ,அதிகாரசபை சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வருதல் ,2011 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட மதுசாரம் தொடர்பான கட்டுப்பாட்டு கொள்கையை நடைமுறைப்படுத்தல் மற்றும் கஞ்சாவை சட்டரீதியாக்குவதற்கு இடமளிக்காமை போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தி போதைப் பொருட்களுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.