சுமாவிற்கு பத்திலிருந்து 20 ஆக அதிகரிப்பு?

சுமந்திரன் முன்பு 10 Field Bikes சகிதம் வலம் வந்தவர் இப்போது 20 Bikes இல் விஷேட அதிரடிப்படை காவல் வழங்க அவர்களுக்கு நடுவில் திரிகின்றார். இதில் இருந்து நாம் புரிந்து கொள்ளக் கூடியது கூட்டமைப்பினருக்கே தமது நடவடிக்கைகளில் பலத்த சந்தேகங்கள் காணப்படுகின்றன.

எங்கே பொது மக்கள் தம்மை கேள்வி கேட்பார்களோ அல்லது எள்ளி நகையாடுவார்களோ அல்லது தமக்கு எதிராக சிறிய வன்முறைகளை பிரயோகிப்பார்களோ என்ற பயத்திலேயே இவ்வாறு கூடுதல் பாதுகாப்பு உதவிகளை பெற்றிருக்கின்றார்கள் என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.
கூட்டணியின் கருத்துப் பரப்புரைக் கூட்டம், அராலி துணைவிப் பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற போது தேசியக் கூட்டணித் தலைவருரையின் போதே விக்கினேஸ்வரன் இதனைத் தெரிவித்தார். ஆவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:
பாராளுமன்றத்தில் அதிகூடிய சக்தியாக விளங்கக் கூடிய எதிர்க்கட்சி தலைமை தமிழ் தேசியக் கூட்டணிக்கு கிடைத்த போதும் தமது பலத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான பேரம்பேசலில் ஈடுபடாது ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிபந்தனைகள் அற்ற ஆதரவை வழங்கி வரவு செலவுத் திட்டத்தை முழுமையாக ஆதரித்தார்கள். சண்டை நடைபெற்ற காலங்களில் பாதுகாப்புக்காக ஒதுக்கிய தொகைகளை விட கூடுதலான நிதி ஒதுக்கீடு 2018ல் செய்யப்பட்ட போதும் அதுபற்றி எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. இவ்வாறு பாதுகாப்பு படைக்கு ஒதுக்கப்பட்ட நிதி தமிழர் தாயகமாகிய வடக்குக் கிழக்கில் இராணுவ பலத்தை அதிகரிக்கவும், தமிழர்களின் நிலங்களைச் சூறையாடவும், சைவ கோவில்களை அழித்து பௌத்த விகாரைகளை உருவாக்கவுமே பயன்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறைந்த பட்சம் நீண்ட காலமாக சிறையில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அழுத்தங்களைப் பிரயோகித்திருக்கலாம். யுத்த காலத்தில் ஆக்கிரமித்த தமிழ் மக்களின் நிலங்களை விடுவித்து கொடுத்திருக்கலாம். ஆனால் இவை எவையுமே செய்யவிலலை.
மாறாக தம்பி சுமந்திரன் முன்பு 10 Field Bikes சகிதம் வலம் வந்தவர் இப்போது 20 Field Bikes இல் விஷேட அதிரடிப்படை காவல் வழங்க அவர்களுக்கு நடுவில் திரிகின்றார். இதில் இருந்து நாம் புரிந்து கொள்ளக் கூடியது .
கூட்டமைப்பினருக்கே தமது நடவடிக்கைகளில் பலத்த சந்தேகங்கள் காணப்படுகின்றன. எங்கே பொது மக்கள் தம்மை கேள்வி கேட்பார்களோ அல்லது எள்ளி நகையாடுவார்களோ அல்லது தமக்கு எதிராக சிறிய வன்முறைகளை பிரயோகிப்பார்களோ என்ற பயத்திலேயே இவ்வாறு கூடுதல் பாதுகாப்பு உதவிகளை பெற்றிருக்கின்றார்கள் என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.
நான் வடமாகாண சபையில் முதலமைச்சராக இருந்த காலத்தில் கட்சியினருக்கு பலதையும் எடுத்துக் கூறினேன். எதுவும் செவி சாய்க்கப்பட்டதாக இல்லை. அந்த நேரத்திற்கு மட்டும் எம்மைச் சமாதானம் பிடிக்க ஏதாவது சாட்டுப் போக்குகளைக் கூறி தங்களது கடமைகளைக் கைவிட்டு விடுவார்கள். வடமாகாணசபைத் தேர்தலில் நாம் போட்டியிட்ட காலத்தில் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. தேர்தலில் அனைவரும் இணைந்து முழுமையாக வாக்களித்து என்னை சுமார் 133000 வாக்குகள் பெற்று அமோக வெற்றியடையச் செய்தார்கள். நானும் மக்களுடன் இணைந்து
வெற்றிக்களிப்படைந்ததோடு எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட வகையில் செயற்பட முற்பட்டேன்.
அதன்பின்னர் தான் நான் ஒரு விடயத்தைப் புரிந்து கொண்டேன். தேர்தல் விஞ்ஞாபனம் என்பது தேர்தல் காலங்களில் மக்களை மகிழ வைக்கவும் வாக்குகளைச் சூறையாடுவதற்கும் தயாரிக்கப்படுகின்ற ஒரு போலி வாக்குறுதி ஆவணம் என்று. அந்தப் போலியான வாக்குறுதி பற்றி மக்களும் நன்கு அறிந்திருந்தார்கள். அரசியல்வாதிகளுக்கும் அது நன்கு தெரிந்திருந்தது. ஆனால் எனக்கு மட்டுமே அது புரியவில்லை. நீண்ட காலம் நீதிபதியாக கடமையாற்றியதன் விளைவு போலும் நாங்கள் உண்மைக்குப் புறம்பான விடயங்களைப் பேசுவதில்லை. நடப்பதையே கூறுவோம் நடக்க முடியாதவற்றை முடியாதென்று எடுத்துக் கூறுவோம்.
ஆகவே இந்த அரசியல் முன்னெடுப்புக்களும் பித்தலாட்டங்களும் எனக்கு புதுமையாக இருந்தது. மேலும் நான் முதலமைச்சராகப் பதவியேற்ற காலத்திலிருந்து இன்று வரை என்னைச் சந்திக்க வருகின்ற பொது மக்கள் தமக்கு ஏற்பட்ட துன்ப துயரங்கள், இழப்புக்கள், உயிர் அச்சுறுத்தல்கள், உடமைகள் அழிப்பு, பெண்களின் கற்பு சூறையாடல் போன்ற பல விடயங்களை என்னிடம் கொண்டு வந்தார்கள். கொழும்பில் பிறந்து கொழும்பில் வேலை செய்து ஓய்வு பெற்ற பின்னர் எனது பேரக் குழந்தைகளுடன் காலங் கழிப்பதும் சட்ட மற்றும் இலக்கிய, ஆன்மீக துறைகளில் எஞ்சிய நேரத்தை கழிக்க விரும்பிய என் மனம் இந்த மக்களின் துன்ப துயரங்களை கேட்ட பின்னர் அவை அனைத்தையும் மறந்து இந்த மக்களுக்காக எனது எஞ்சிய காலத்தை வாழ்ந்து அவர்களுக்கான உதவிகளை அரசியல் ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பெற்றுக் கொடுக்க முனைவது என்ற இறுக்கமான தீர்மானத்தை எடுத்தேன். இப்போது அதன் வழி பயணித்துக் கொண்டிருக்கின்றேன்.
என்னைப் பொறுத்த வரையில் நான் அரசியலில் இணைந்து கொண்டு பணம் சம்பாதிக்க வேண்டும், சொகுசு பங்களாக்களில் குடியிருக்க வேண்டும், நவீன ரக வாகனங்களில் ஓடித்திரிய வேண்டும் என்ற எதுவித தேவையும் எனக்கில்லை. அப்படியான வாழ்க்கையில் எனக்கு மோகமும் இல்லை. அதனால்த்தான் கொள்கை வழியில் ஒத்துப் போகக் கூடிய இன்னும் பலருடன் இணைந்து இந்தப் புதிய கூட்டணியை உருவாக்கி இருக்கின்றோம்.
இந்தப் புதிய கூட்டணியில் தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கோ அல்லது அவர்களின் எழுந்தமான முடிவுகளுக்கோ இடமில்லை. எமது கட்சி ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட கட்சியாக மிளிர்கின்ற காரணத்தினால் இங்கு எல்லா முடிவுகளும் கூட்டுப் பொறுப்புள்ளவையாகவே அமைவன. எம்மை நீங்கள் தெரிவு செய்து பாராளுமன்றிற்கு அனுப்புவதன் மூலம் உங்கள் தேவைகளை முடிந்தளவு நிறைவு செய்து தரக் கூடிய ஒரு கட்சியை தெரிவு செய்து இருக்கின்றீர்கள் என்ற மகிழ்வு உங்களுக்கும் கிட்டும் நாங்களும் முடிந்தளவு எமது மக்களின் பிரச்சனைகளை அரசுடன் பேச எத்தனிப்போம்.