September 16, 2024

ஜேர்மனி நுழைவிசை பெற முயற்சி! போலிப் பத்திரிகை அச்சடித்தவர் கைது!

பிரபலமான தமிழ் பத்திரிகைகளை போன்று போலி பத்திரைகளை அச்சிட்டு அதனூடாக ஜேர்மன் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ள முயற்சித்த நபரொருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

மிரிஹான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தைத்  தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,
பிரபலமான தமிழ் பத்திரிகைகளை போன்று  மூன்று பத்திரிகைகளை அச்சிட்டு வெளிநாட்டுக்கு வழங்கி வந்த நபரொருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இவ்வாறு மூன்று பத்திரிகைகளை அச்சிட்டுள்ளதுடன் அதில் போலி செய்திகளை உள்ளடக்கியுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த போலி பத்திரிகையின் ஊடாக தான் அரசியல் பழிவாங்களுக்கு உள்ளாகியிருப்பதாக காண்பித்து வெளிநாட்டுக்குச் செல்ல முற்பட்டுள்ளதுடன் , அதனூடாக குறித்த நாடுகளில் பிரஜாவுரிமை மற்றும் வீசாவையும் பெற்றுக் கொள்ள முயற்சித்துள்ளார்.
அதற்கமைய சந்தேக நபர் முதலில் ருமேனியா நாட்டுக்கு சென்று பின்னர் அங்கிருந்து ஜேர்மன் செல்வதற்கு எண்ணியுள்ளதுடன் , இதற்காக வெளிநாட்டு பயண முகவர் நிலையமொன்றுக்கு கட்டணமும் செலுத்தியுள்ளார்.
தமிழ் பத்திரிக்கை ஒன்றில் பக்கவடிவமைப்பு பிரிவில் பணிபுரிந்துள்ள குறித்த சந்தேக நபர் , பல போலி ஆவணங்களை தயாரித்து வழங்கியுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது
சந்தேக நபரின் செயற்பாடுகளுக்கு ஜேர்மனியில் உள்ள இருவரின் உதவியைப் பெற்றுக் கொடுத்துள்ளதுடன் , அவரின் இந்த செயற்பாட்டினால் இலங்கை அரசாங்கத்திற்கும் பெரும் அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபரை குற்றப் புலனாய்வு பிரிவினர் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தி வருவதுடன் புலம் பெயர் தமிழ் அமைப்புகளினால் இவ்வாறான செயற்பாடுகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றதா ? என்பது தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.