September 30, 2023

“விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி“ என்பார் தம்பி பிரபாகரன்

“விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி“ என்பார் தம்பி பிரபாகரன். மக்கள் விழிப்படைய வேண்டும் இதுவரைகாலமும் தம்பியின் பெயரைச்சொல்லி அரசியல் செய்தவர்கள் எல்லா இன்றைக்கு வரை பிழையானவராக காட்டி அரசியல் செய்ய முயல்கிறார்கள். காரணம் அவர்கள் சிங்கள தலைவர்களிடம் இருந்து நல்ல பெயர் எதிர்பார்க்கின்றார்கள். மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வந்தவர்களின் முகத்திரை இன்று கிழிந்து உள்ளது. இத்தகையவர்களுக்கு ஓய்வு கொடுத்து இனப்படுகொலைக்கு நீதியை வலியுறுத்துகின்ற சுயநிர்ணய ஆட்சியை வலுவாக்க கோருகின்ற எங்களுக்கு இந்த முறை வாய்ப்பைத் தாருங்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சருமான நீதியரசர் சிபி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர்  தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்தார் இதுதொடர்பாக அவர் அளித்துள்ள கேள்விக்கான பதில்கள் வருமாறு..
கேள்வி :- ஒரு மாகாணத்தின் முதல்வராக இருந்த நீங்கள் பாராளுமன்றத் தேர்தல் ஒன்றில் போட்டியிட தேவைதானா?
பதில் :- தேவை மக்கள் சேவையை வழிநடத்த அதிகாரம் தேவையாக இருக்கின்றது மக்கள் சேவை எனும்போது மக்களை ஒன்றிணைப்பது, அவர்களின் வாழ்வாதாரம் உள்ளடங்கலான அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பது, தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை உறுதிப்படுத்துதல் சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல், என்று பலவும் அதனுள் அடங்கும். முதல்வர் என்ற பதவியை அனுபவித்துவிட்டு, அதன் கௌரவங்களுடன் அரசியலிலிருந்து ஓய்வுபெற விரும்பம் ஒருவர் ஓய்வை நோக்கி செல்லலாம். ஆனால் முதல்வர் பதவிக்கு வந்தபின்பு, தமிழ் மக்களின் எதிர்பார்ப்பையும் நான் அங்கம் வகித்த கட்சியின் தலைமைத்துவத்தின் ஏமாற்றுதல்களையும் கண்டபிறகு ஓய்வெடுப்பது சுயநல செயலாக நான் கருதினேன். எம் மக்களுக்கு கொள்கை ரீதியான ஒரு மாற்று அரசியல் பாதையை உருவாக்கி விட்டு ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அதனால்தான் இந்தப் பயணம் எங்கள் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் பல ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து வருகின்றார்கள். அவர்கள் சேவை மனப்பான்மையும் மக்கள் நேய மனோபாவத்தையும் வெளிக்காட்ட வேண்டும். அவ்வாறான மனோபாவத்தை எம் கட்சியினரால் வழிகாட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
கேள்வி :- ஒருவேளை தமிழ் தேசியக்கூட்டமைப்புலேயே அங்கம் வகித்திருந்தார் அக்கட்சியின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தாங்கள் இருந்திருக்க முடியுமல்லவா?
பதில் :- நான் எந்தக் காலத்திலும் அரசியலுக்கு வர விரும்பவில்லை. அதை பலமுறை கூறி இருக்கின்றேன். முதல்வராக வந்த தொடக்கத்தில் இருந்து பலமுறை கூறி வந்திருக்கின்றேன். ஆனால் வந்தபின் கண்டவை எனக்கு வியப்பை ஊட்டின . தொடர்ந்தும் கட்சியில் இருக்க வேண்டும், அதற்காக கட்சி தலைவர்களுக்கு ஆமா போட வேண்டும், கட்சி மூலமாக தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளில் இருக்க வேண்டும், அதற்காக மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பதை விடுத்து கட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்ற மனோபாவத்தில் நமது பிரதிநிதிகள் இருக்க கண்டேன்.
கட்சித் தலைவர்களும் அதையே எதிர்பார்க்கிறார்கள். அவர்களைப்போல பதவிகளுக்காகவும் சுகபோகங்களும் நான் அரசியலுக்கு வந்து இருந்தால் தொடர்ந்து முதல்வராக இருக்க ஆசைப்படிருப்பேன். நான் இப்போது தமிழ் மக்களின் எதிர்காலத்தை அச்சத்துடன் காண்கின்றனர். கொள்கை ரீதியாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரு விவேகம் தான் என்னை இந்த மாற்றுத் தலைமை பயணத்திற்கு கொண்டு வந்துள்ளது.
கேள்வி :- தனியாக அரசியல் பயணத்தை தொடங்க தான் வேண்டுமா?
பதில் :- இந்த நிர்ப்பந்தத்தை கூட்டமைப்பின் பிரதிநிதிகள்தான் உருவாக்கினார்கள். எனக்கு எதிராக ஒரு குற்றப் பிரேரணையை உருவாக்கி, அது இலங்கை அரசின் பிரதிநிதியான அன்றைய  ஆளுநரிடம் கொண்டு சென்று கையளித்தார்கள். எந்த ஆளுநர் வேண்டாம் என்றார்களோ அந்த ஆளுனருடன் சென்று என்னை எதிர்ப்பதற்காக மண்டியிட்டார்கள். நான் மக்களுக்கு உண்மையாக இருந்து கொள்கையில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் செய்யப்படவேண்டிய மை அவர்களுக்கு சிக்கலாக இருந்தது. அப்படி சிக்கலான அவர்களைவிட்டு நான் கொள்கைப்பற்றுடன்  பயணிப்பதுதானே சிறந்தது? தமிழர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று ஒதுங்கியிருக்க என்னை என் மனம் விடவில்லை.
கேள்வி தமிழ் தேசியக் கூட்டமைப்பை மீதான தங்கள் பிரதான விமர்சனம் என்ன?
பதில்:-  தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தை ஆதரித்த போது மக்களின் பிரச்சனைகள் பலவற்றை தீர்த்திருக்கலாம். அந்த பொன்னான வாய்ப்பை அவர்கள் தவற விட்டார்கள். அன்றைக்கு பௌத்தத்திற்கு முன்னுரிமை அளித்து ஆதரித்தவர்கள், வடக்கு கிழக்கில் விகாரை கட்டும் தீர்மானங்களையும் தமிழர்களுக்கெதிரான பல திட்டங்களையும் ஆதரித்தார்கள். அவற்றின் விளைவுகள் தான் இன்றைக்கு தொல்லியில் ஆக்கிரமிப்புக்கள் இம்மண்ணில் பெருமளவில் நடக்க இடம் அளித்துள்ளன. அத்துடன் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று நாங்கள் வடக்கு மாகாணசபையில் தீர்மானம் கொண்டு வந்தோம் . ஆனால் இனப்படுகொலை சம்பந்தமான சர்வதேச விசாரணையை நடத்தவிடாமல் கால அவகாசத்தை வழங்கி அதனை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளில் எமது பிரதிநிதிகள் நடந்து கொண்டவை ஏற்கத்தக்கவை அல்ல.
கேள்வி:- தமிழ்த் தலைவர்கள் மக்களுக்கு என்ன கடமையை ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்
பதில்:-  உண்மையும் நேர்மையும் வெளிப்படை தன்மையும், கொள்கைப் பற்றும் தான் தமிழ்த் தலைவர்கள் வெளிப்படுத்த வேண்டிய பண்புகள். வேறு கடின விடயம்ஒன்றும் இல்லை. நான் வடக்கில் மக்களுடன் மக்களாக வாழ்ந்த காலத்தில் தான் நிறைய விடயங்களை உணர்ந்தேன். எங்கள் மக்கள் நிறைய தியாகங்களை செய்தவர்கள். அவர்களுக்கு நிறைய அனுபவங்கள் உண்டு அவர்களை ஏமாற்றி அரசியல் செய்ய முடியாது. உண்மையில் மக்களுடன் மக்களாக வாழ்வதும் அவர்களுக்கு நேர்மையாக இருப்பது தான் தமிழ் தலைவர்களின் கடமையாக இருக்க வேண்டும். ராஜதந்திரம் என்ற பெயரில் மக்களுக்கு துரோகம் இழைக்கூடாது. இன்று மக்களுக்கு இது நன்றாக விளங்குகின்றது. இனியும் அதை எங்கள் அரசியல்வாதிகள் செய்ய முடியாது.
கேள்வி:- வடக்கு மாகாணசபையில் இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றியமையால் எதை சாதிப்பீர்கள்?
பதில்:- இதுவரை காலமும் இலங்கையில் தொடர்ச்சியாக நடந்து வந்துள்ளது இனப்படுகொலையே என்பதை இந்தத் தீவுகள் உள்ள சட்ட ரீதியான அல்லது ஜனகர் சபையில் நிறைவேற்றி இருப்பது தான் அதன் முக்கியத்துவம். தமிழ்நாட்டு சட்டமன்றத்திலும் வடக்கு மாகாண சபையிலும் தான் இத்தகைய ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரலாறு முழுவதும் ஒரு ஆவணமாக மாத்திரமல்லாமல், ஆயுதமாகவும் இருக்க இந்த தீர்மானம் வழிவகுத்துள்ளது, அது தான் இலங்கை அரசின் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. துரதிருஷ்டவசமாக நமது பிரதிநிதிகள் எனப்படுவோர் இருக்கும் அதனால்தான் என் மீது கோபம் இது மிக கவலையான விடயம் அவர்கள் தேர்தல் கூட்டங்கள் இடமும் ஊடகங்களையும் பேசிவந்த இனப்படுகொலை என்ற விடயத்தை தானே நாம் தீர்மானமாக நிறைவேற்றினோம். ஆனாலும் அதன் காரணமாக அவர்களுக்கு என் மீது ஏன் கோபம் வந்துள்ளது என்பது ஒரு புரியாத விடயமாக உள்ளது. ஒருவேளை அவர்களின் சுயநலமே அவர்கள் என்னை வெறுக்க காரணமாக இருந்திருக்கக்கூடும் ஆகவே எமது சுயநல அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிக்கவும் இந்த தீர்மானம் உதவி செய்துள்ளது.
கேள்வி:- மக்களிடம் என்ன கோரிக்கையை முன் வைக்கின்றீர்கள்?
பதில்:- விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி என்பார் தம்பி பிரபாகரன். மக்கள் விழிப்படைய வேண்டும் இதுவரைகாலமும் தம்பியின் பெயரைச் சொல்லி அரசியல் செய்தவர்கள் எல்லாம் இன்றைக்கு அவரை தவறாக காட்டி அரசியல் செய்ய முயல்கிறார்கள், காரணம் அவர்கள் சிங்கள தலைவர்களிடம் இருந்து நல்ல பெயர் எதிர்பார்க்கின்றார்கள். மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வந்தவர்களின் முகத்திரை இன்று கிழிந்துள்ளது. அவர்களுக்கு ஓய்வு கொடுத்து, இனப்படுகொலைக்கு நீதியை வலியுறுத்துகின்ற, சுயநிர்ணய ஆட்சியை வலுவாக கோருகின்ற எங்களுக்கு இந்த முறை வாய்ப்பு தாருங்கள் என்று கேட்கின்றேன். ஒரு புதிய அரசியல் சூழல் ஏற்பட்டும் . இல்லாது போனால் எங்கள் புனிதங்களை அவமதிப்பவர்களுக்கும் எங்களை ஏமாற்றுபவர்களுக்கும் அங்கீகாரம் அளிப்பது போல் ஆகும், அது எங்கள் மண்ணுக்கு நாங்களே இழைக்கும் துரோகம் ஆகிவிடும்.
கேள்வி:- உங்கள் பயணத்திற்கு மக்கள் எத்தகைய ஆதரவை வழங்குவார்கள் என நினைக்கிறீர்கள்?
பதில்:- தமிழ் தேசிய கூட்டமைப்பில் எனக்கு ஒரு நெருக்கடி வந்தபோது இளைஞர்களும் மக்களும் திரண்டு வீதிக்கு வந்தார்கள், வடக்கு கிழக்கு எங்கும் எழுந்து வந்து யாழ்ப்பாணக் கோவில் தெருவில் நின்று எனக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள், அந்த ஆதரவு குரல் தானே அரசியல் பயணத்தை தூண்டியது. எனக்கான கடமையை உணர்த்தியது, மக்கள் இம்முறை எங்களுக்கு அமோக ஆதரவு தருவார்கள். மக்கள் தரும் ஆதரவை அவர்களின் விடுதலைக்காக கடுமையாக பயன்படுத்துவோம் சலுகை அரசியல் வியாபார அரசியல் போன்றவற்றிற்கு எதிராக குரல் கொடுப்பதுடன் எமது கொள்கையை வலியுறுத்தி ஒரு முன்மாதிரியான புதிய அரசியலை தொடங்குவோம் என ஊடக செவ்வியில் தெரிவித்தார்.