September 16, 2024

தென்னாபிரிக்காவின் 3 அணி கிரிக்கெட்டில் டி வில்லியர்ஸ் அணி சம்பியன்!

தென்னாபிரிக்காவின் 3 அணி கிரிக்கெட்டில் டி வில்லியர்ஸ் அணி சம்பியன்!

தென்னாபிரிக்காவில் நடந்த புதுமையான கிரிக்கெட் போட்டியில் டிவில்லியர்ஸ் தலைமையிலான ஈகிள்ஸ் அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது.

கொரோனாவின் சீற்றத்தால் தென்னாபிரிக்காவில் விளையாட்டுக்கள் முற்றிலும் முடங்கி விட்டது. நிலைமை ஓரளவு சீரடைந்து வரும் நிலையில் கொரோனா பாதிப்புக்கு நலநிதி திரட்டுவதற்காக தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியம் 3டிசி என்ற பெயரில் புதுமையான கிரிக்கெட் போட்டியை நடத்த ஏற்பாடு செய்தது. இந்த ஆட்டம் செஞ்சூரியனில் நேற்று நடந்தது.

டிவில்லியர்ஸ் தலைமையில் ஈகிள்ஸ் அணியும், டெம்பா பவுமா தலைமையில் கைட்ஸ் அணியும், ரீஜா ஹென்ரிக்ஸ் தலைமையில் கிங்பிஷர்ஸ் அணியும் பங்கேற்றன. முதலில் குயின்டன் டி கொக், ரபடா ஆகியோரும் கப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் அவர்கள் சொந்த காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகி விட்டது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு அணியிலும் 8 வீரர்கள் இடம் பிடித்திருந்தனர். மொத்தம் 36 ஓவர் அடிப்படையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிக்கு எதிராக தலா 6 ஓவர் வீதம் விளையாட வேண்டும். பந்து வீச்சாளர் தலா 3 ஓவர் வீசிக்கொள்ளலாம். இதன்படி ஒவ்வொரு அணியும் 12 ஓவர் விளையாடி முடித்த பிறகு யார் அதிக ரன்கள் குவித்து இருக்கிறார்களா? அவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். ரொப்-2 அணிகள் சரிசம ரன்கள் எடுத்திருந்தால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படும்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் வீரர்கள் முதலில் மைதானத்தில் முட்டிப்போட்டு கருப்பினத்தவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அத்துடன் ‘கருப்பினத்தவரின் வாழ்க்கை முக்கியம்’ என்ற வாசகம் அடங்கிய கருப்பு பட்டையை ஒவ்வொரு வீரர்களும் கையில் அணிந்திருந்தனர்.

இந்த வித்தியாசமான போட்டியில் டிவில்லியர்ஸ் தலைமையிலான ஈகிள்ஸ் அணி அமர்க்களப்படுத்தியது. 12 ஓவர்களில் மொத்தம் 4 விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இரண்டு முறை களம் இறங்கிய டிவில்லியர்ஸ் மொத்தம் 24 பந்தில் 64 ரன்கள் விளாசினார். இதே அணிக்காக ஆடிய மார்க்ராம் 33 பந்துகளில் 70 ரன்கள் நொறுக்கினார்.

கைட்ஸ் அணி வீரர் பிரிட்டோரியஸ் சுழற்பந்து வீச்சாளரான ஷம்சியின் (கிங்பிஷர்ஸ்) ஒரே ஓவரில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 28 ரன்கள் பதம் பார்த்தது இன்னொரு சிறப்பு அம்சமாகும். கைட்ஸ் அணி 3 விக்கெட்டுக்கு 138 ரன்களுடன் வெள்ளிப்பதக்கமும், கிங்பிஷர்ஸ் 5 விக்கெட்டுக்கு 113 ரன்களுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றன.