April 18, 2024

99 பேரை தனது கட்சியிலிருந்து தூக்கி வீசினார் ரணில்!

99 பேரை தனது கட்சியிலிருந்து தூக்கி வீசினார் ரணில்!

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஊடாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்த 99 பேரை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்க அந்த கட்சியின் செயற்குழு இன்று ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமானது.

ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிக்கும் நிலையில் வேறு கட்சியின் ஊடாக வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கவில்லை என்பதால், அவ்வாறு வேட்புமனுக்களை தாக்கல் செய்த 99 பேரை கட்சியில் இருந்து நீக்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, கபீர் ஹாசிம், லக்ஷ்மன் கிரியெல்ல, ஹரின் பெர்னாண்டோ, சரத் பொன்சேகா, ரஞ்சன் ராமநாயக்க, ரஞ்சித் மத்துமபண்டார, நளின் பண்டார, முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார உட்பட பல முக்கியஸ்தர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் அரசாங்கத்தின் தேவைக்கு அமையவே ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறான நடவடிக்கையை எடுக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.