März 29, 2024

76 வருடமாக தண்ணீர், உணவு இல்லாமல் விஞ்ஞானிகளையே அதிர வைத்த சாமியார்… வெளியான முக்கிய தகவல்

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் சரடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சாது பிரகலாத் ஜனி (90). இவர் சிறுவயதிலேயே ஆன்மீக ஈடுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார்.

பின்னர் பனஸ்கந்தா மாவட்டத்தில் அம்பாஜி அம்மன் என்ற கோயில் அருகே சிறிய குகை போன்ற ஆசிரமத்தை அமைத்தார். இவர் பெண்களை போல புடவை, நகைகள் அணிந்து வந்ததால் மக்கள் அவரை ‘மாதாஜி’ என அழைத்து வந்தனர்.

சாது பிரகலாத் ஜனி அம்மனின் அருள் காரணமாக 76 ஆண்டுகளாக உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள், டாக்டர்கள் கொண்ட குழு, கடந்த 2003ம் ஆண்டு பிரகலாத் ஜனியை பரிசோதனை செய்தனர்.

பின்னர் கடந்த 2010ம் ஆண்டு 15 நாள்கள் தங்கள் கண்காணிப்பில் வைத்து மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்தனர்.

இதனை அடுத்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், பிரகலாத் ஜனி உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் வாழ சில தீவிரமான பயிற்சிகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக பிரகலாத் ஜனி உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். இதனால் தனது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என சீடர்களிடம் தெரிவித்துள்ளார். அதன்படி சில நாள்களுக்கு முன் அவரை சொந்த ஊருக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு நேற்று காலை பிரகலாத் ஜனி காலமானார். தற்போது அவரது உடல் மீண்டும் பனஸ்கந்தா ஆசிரமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என சீடர்கள் தெரிவித்துள்ளனர்.