März 29, 2024

கொரோனா விஷயத்தில் மகத்தான சாதனை படைத்துள்ளோம்! சீனா….

சீனாவில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதால், அந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதில், மகத்தான சாதனை படைத்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

உலகையே இப்போது மிரட்டி வரும் கொரோனா வைரஸ், முதன் முதலில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் தான் கண்டறியப்பட்டது.

ஆனால் இதற்கு முன்னரே ஒரு சில நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும் இந்த வைரஸ் கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பு அடுத்த இரண்டு மாதத்துக்குள் சீனாவை புரட்டிப்போட்டது.

தொடர் பாதிப்புகளால் நிலைகுலைந்த சீனா, நோய் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதனால் மார்ச் மாதத்துக்கு பிறகு சீனாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனை அடுத்து கடந்த மாதம் முதல் சீனாவில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

சுமார் 140 கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவில் கொரோனாவால் 80,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதோடு 4,634 சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இம்மாதம் முதல் சீனாவில் இருந்து புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் சீனாவில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து சீன நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய அந்நாட்டு பிரதமர் லீ கெக்கியாங், அரசின் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் புதிதாக கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை எனவும் பாதிப்பை கட்டுப்படுத்துவதில் மகத்தான சாதனையை சீனா புரிந்துள்ளதாக தெரிவித்தார். ஆனால் அதை தவிர இன்னும் பல சவால்களை நாடு எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.