April 19, 2024

பயம் வேண்டாம் – இறந்த வைரஸே!

யாழில் மீண்டும் கொரோனோ என யாரும் பீதியடைய தேவையில்லை. நேற்றைய தினம் பரிசோதனையில் பொசிட்டீவ் என வந்தது இறந்த வைரஸாக இருக்கலாம் என்றே நம்புகிறோம். அவர்கள் ஐவரும் வீடுகளில் தனிமைப்பட்டு இருக்க அறிவுறுத்தியுள்ளோம் என யாழ்.போதனா வைத்தியாசலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணடைந்த ஐவருக்கு இப்போதும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட விடயம் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் திருமதி ரஜந்தி இராமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
இன்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விளக்கமளித்த அவர், மனித உடல் கலன்களின் அடிப்படை மூலக்கூறாக இருப்பது டின்ஏ (DNA) மற்றும் ஆர்என்ஏ (RNA) ஆகும்.
கொரோனா வைரஸில் இருப்பது ஆர்என்ஏ மூலக்கூறாகும். எனவே பிசிஆர் கொரோனா பரிசோதனையானது ஆர்என்ஏ மூலக்கூறினை கண்டறிவதாகும். இந்த மூலக்கூறு மனித உடலில் இருக்கின்றாதா? இல்லையா? என்பதை கண்டறியும் போது அந்த மூலக்கூறு உயிரோடு உள்ளதா? இல்லையா? என்பதை கண்டறிய முடியாது.
முன்னதாக தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்த பின்னர், இரண்டு தடவைகள் ஆர்என்ஏ மூலக்கூறு இல்லை என முடிவு வந்ததன் அடிப்படையில் தான் அரியாலையை சேர்ந்த அறுவர் விடுவிக்கப்பட்டனர்.
சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் படி ஒருவருக்கு இரண்டு தடவை பரிசோதனை செய்யும் போது, பொசிடீவ் (தொற்று) இல்லை என கண்டறியப்பட்டால், அவரை குணமடைந்தவராக விடுவிக்க அறிவுறுத்தப்படுகின்றது.
அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைத்திருக்க வேண்டும். அதன்படி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 14 நாட்கள் நிறைவில் தான் நேற்று அரியாலையை சேர்ந்த ஆறு பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
அதன்போது கண்டறியப்பட்டது இறந்த கொரோனாவாகவே இருக்கும் என்று கருதுகிறோம்.
இலங்கையில் மட்டுமல்ல தென் கொரியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் ஆய்வு வெளியீட்டிலும் குணமடைந்தோருக்கு இறந்து போன வைரஸ் இருப்பதை நிரூபித்துள்ளனர்.
எனவே மீண்டும் கொரோனா என்று எழுதுவது தேவையற்ற பதற்றமூட்டல் என்றே கருதுகிறோம். – என்றார்.